LPL போட்டிகளில் விளையாடி வரும் நான்கு சகோதர ஜோடிகள்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சகோதர ஜோடிகள் விளையாட்டு வீரர்களாகவும் ஒரு சகோதர ஜோடி பொது மத்தியஸ்தர்களாகவும் இன்னும் ஒரு சகோதர ஜோடிகள மத்தியஸ்தர்களாகவும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். டி சில்வா சகோதரர்கள்: சத்துரங்க – வனிந்து ஹசரங்க இவர்கள் இருவரும் இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டில் தேசிய வீரர்களாவர். சகலதுறை ஆட்டக்காரர்களான இவர்கள் இருவரும் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெறுவதுடன் ஜோடியாகவும் துடுப்பெடுத்தாடியுள்ளனர். இவர்களில் மூத்தவரான சத்துரங்க (30 வயது) தற்போது முதற்தர கழக போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றுவதுடன் இளையவரான வனிந்து ஹசரங்க (23 வயது) தேசிய அணியில் தொடர்ந்து விளையாடிவருகின்றார். இத்தகைய உயரிய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒன்றாக விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சி தருகின்றது என டி சில்வா சகோதரர்கள் தெரிவிக்கின்றனர். பெர்னாண்டோ சகோதரர்கள்: விஷ்வா – நுவனிது இவர்களில் மூத்தவரான விஷ்வா (29 வயது) மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியுள்ளார். இளையவரான நுவனிது (21 வயது) முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகின்றார். கெண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விஷ்வா விளையாடிவருகிறார். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் குழாத்தில் இடம்பெறும் நுவனிது இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. லெப்ரோய் சகோதரர்கள்: க்றேம் – வெண்டல் லெப்ரோய் சகோதரர்களான க்றேம் மற்றும் வெண்டல் ஆகிய இருவரும் லங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் பொது மத்தியஸ்தர்களாக கடமையாற்றுகின்றனர். மூத்தவரான க்றேம் (56 வயது) டெஸ்ட் போட்டிகளிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியவர். இளையவரான வெண்டல் (49 வயது) ஒரு சமயம் ஷார்ஜா மும்முனை சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றபோதிலும் அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் அக்காலத்தில் பிரபல்யமாக இருந்த ஹொங் கொங் சிக்சஸ் போட்டியில் விளையாடியிருந்தார். எவ்வாறாயினும் இவர்க்ள இருவரும் ஒரே சமயத்தில் ஐசிசி பொது மத்தியஸ்தர்களாக பணியாற்றுகின்றமை மிக அபூர்வமான ஒன்றாகும். லங்கா பிறீமியர் லீக்கின் ஆரம்பப் போட்டியில் கலம்போ கிங்ஸ் அணியும் கெண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதிக்கொண்டபோது பொது மத்தியஸ்தராக க்றேம் பணியாற்றினார். மறுநாள் நடைபெற்ற ஜெவ்னா ஸ்டாலின்ஸ் அணிக்கும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் பொது மத்தியஸ்தராக வெண்டல் செயற்பட்டார். ஒரே சுற்றுப் போட்டியில் இருவரும் பொது மத்தியஸ்தர்களாக பணியாற்றக் கிடைத்தமை மகிழச்சி தருவதாக லெப்றோய் சகோதரர்கள் குறிப்பிட்டனர். கொட்டஹாச்சி சகோதரர்கள்: ரோஹித்த – ரவீந்த்ர ரோஹித்தவும் ரவீந்த்ரவும் நான்கு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு சகோதரர்களும் இலங்கை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மத்தியஸ்தர்களாக கடமையாற்றிவருகின்றனர். 2000ஆம் ஆண்டிலிருந்து முதலாம் வகுப்பு மத்தியஸ்தராக கடமையாற்றிவரும் மூத்தவரான 49 வயதுடைய ரோஹித்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரராவார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னணி மத்தியஸ்தர்கள் குழவிலும் இடம்பெறுகின்றார். இளையவரான ரவீந்த்தர (45 வயது) முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரராவார். 2006இலிருந்து முதலாம் வகுப்பு மத்தியஸ்தராக கடமையாற்றிவரும் இவர், மூத்த சகோதரரைப் போன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் மத்தியஸ்தர்கள் குழுவில் இடம்பெறுகின்றார். கலம்போ கிங்ஸ் அணிக்கும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும் இடையில் நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ரோஹித்த கள மத்தியஸ்தராக கடமையாற்றினார். கெண்டி டஸ்கர்ஸ் அணிக்கும் தம்புள்ள வைக்கிங் அணிக்கும் இடையிலான போட்டியில் நான்காவது மத்தியஸ்தராக இளையவரான ரவீந்த்ர செயற்பட்டார்
|
|
கருத்துக்களேதுமில்லை