நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்த வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது-சர்வதேச மன்னிப்புச்சபை
அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான வழிமுறையையே இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய அலுவலகத்தின் தொடர்பாடல் மற்றும் பிரசார உதவியாளர் ரெஹாப் மஹமூர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பெருமளவானோர் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படல், தம்மால் வைரஸ் தொற்று பிறருக்குப் பரவுதல், தமது அன்பிற்குரியவர்கள் வைரஸ் தொற்றினால் துன்பப்படுவதைக் காணுதல் மற்றும் அவர்களின் மரணத்தை எதிர்கொள்ளல் உள்ளிட்ட அச்சம் பலர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மேற்கூறப்பட்ட அச்சத்திற்கு மேலாக தமது அன்பிற்குரியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை அடக்கம் செய்யமுடியாது என்றும் அவர்களுக்கான இறுதி கௌரவத்தை அளிக்கமுடியாது என்றும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படும் நாட்டில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மத ரீதியான நம்பிக்கையின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அந்த சடலங்கள் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்படுகின்றன. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதற்கு இயலாத சூழ்நிலை காணப்படுவதுடன், அவர்கள் மீதான வன்முறைகள் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் கொவிட் – 19 என்ற காரணத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கியிருக்கும் மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
எனினும் இவ்வருடத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டிற்குமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முறையாக முஸ்லிம் நபரொருவர் உயிரிழந்தபோது, அவரது குடும்பத்தினரின் விருப்பத்தையும் மீறி அவரின் சடலம் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டது.
அதற்கு முஸ்லிம் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து வலுவான எதிர்ப்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சினால் ‘தகனம் செய்வது’ கட்டாயமாக்கப்பட்டது.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உரியமுறையில் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பலரும் உணர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் ஒரு சமூகத்தை மேலும் வலுவிழக்கச்செய்வதற்கான வழிமுறையையே இலங்கை தெரிவு செய்திருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை