சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்துக்குப் பிந்திய மூன்றாம் கட்டத் தளர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளார்…

கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மூன்றாம் கட்டத் தளர்வில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக, ஒரு குழுவில் எட்டுப் பேர் வரை ஒன்றுகூட அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் எட்டுப் பேர் வெளியே ஒன்றாக உணவருந்தலாம் அல்லது மற்றவர் வீடுகளுக்குச் செல்லலாம்.

விழாக்காலத்தில் குடும்பங்கள் ஒன்றுகூட இந்த ஏற்பாடு வகை செய்யும் என்றார் திரு லீ.

இதுபோக, கடைத்தொகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படுவோருக்கான எண்ணிக்கை வரம்பும் உயர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், மூன்றாம் கட்டத் தளர்வு தொடங்கினாலும், நோய்த்தொற்றுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது என்று பிரதமர் நினைவுபடுத்தினார்.

பல நாடுகளில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கிருமித்தொற்று அலை எழுந்திருப்பதால் கொவிட்-19 இன்னும் முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்படவில்லை என்பதையும் அவர் நினைவூட்டினார்.

கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் குறித்தும் பேசிய பிரதமர் லீ, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார். முதல் தொகுதி தடுப்பூசி மருந்துகள், இந்த மாத இறுதிக்குள் சிங்கப்பூர் வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தடுப்பூசி மருந்துகளைப் பெறும் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மொடர்னா, சினொவெக் போன்ற மற்ற நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளும் எதிர்வரும் மாதங்களில் சிங்கப்பூர் வந்தடையும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் பணிபுரிவோர், முன்களப் பணியாளர்கள், மூத்தோர், எளிதில் பாதிக்கப்படக்கூடியோர் போன்ற தரப்பினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.