கொரோனா காரணமாக இவ்வாண்டில் வித்தியாசமாக நடந்த திருமணங்கள்!
திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு மார்ச் இறுதியில் இருந்தே திருமணங்கள் கொண்டாட்டங்களைக் குறைத்து, வித்தியாசமான முறையில் தான் நடந்து வருகின்றன.
இதோ அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்…
ஸ்பீட் போஸ்ட்டில் தாலி
2020ம் ஆண்டில் கொரோனா பிரச்சினையால், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தரும் வகையில் நடந்த வித்தியாசமான பல திருமணங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதோ அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்… ஸ்பீட் போஸ்ட்டில் தாலி கேரளாவைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ், அஞ்சலி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அவர்களது திருமணப் பேச்சு ஆரம்பமாகி விட்டது. ஆனால் இடையில் கொரோனா பிரச்சினை தலையிட, கடந்த மே மாதம் Zoom மூலம் கோலாகலமாக நடந்து முடிந்தது இவர்களது திருமணம்.
திருமணம் Zoom-ல் நடக்கப்போவதை உறுதி செய்ததும், அதற்கான ஐடி மற்றும் பாஸ்வர்ட்டையே அழகிய அழைப்பிதழாக டிசைன் செய்தனர் மணமக்கள். கேரளாவில் இருந்த மணமக்களின் பெற்றோர், தங்களால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற போதும், ஏற்கனவே தாங்கள் வாங்கிவைத்திருந்த ‘மாங்கல்யத்தை’ (தாலி) ஸ்பீட் போஸ்டில் மணமக்களுக்கு அனுப்பி வைத்தனர். பிறகென்ன உலகமெங்கிலும் உள்ள தங்களின் நண்பர்கள், உறவுகள் Zoom-இல் சூழ, அஞ்சலி கழுத்தில் தாலியைக் கட்டினார் விக்னேஷ். இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால் மணமக்களின் பெற்றோர்களால் இத்திருமணத்துக்கு வரமுடியவில்லை. அவர்களும் ஜூம் மூலமாகவே தங்கள் மகளையும், மருமகனையும் வாழ்த்தினார்கள்.
சாலையோரத்தில் திருமணம்
ஆரம்பத்தில் கொரோனா இவ்வளவு நாள் ஊரடங்கை நடத்த வைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் பள்ளிகள் விடுமுறை என அறிவித்த போதுகூட, மக்கள் அதனை திடீர் விடுமுறையாகத்தான் கருதினர். அதே போல் தான், மார்ச் 22ம் தேதி ஒருநாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, மறுநாள் முதல் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் என்றுதான் நினைத்தனர்.
எனவே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்திருந்தவர்கள், 22ம் தேதி தங்களது உறவினர்களுடன் கோயிலிலுக்கு வந்தனர். ஆனால், கோயிலினுள் திருமணம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கோயில் நிர்வாகம் அவர்களை வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொல்லி அறிவுறுத்தினர். இதனால் கோயில் அருகில் சாலையில் வைத்தே, உறவினர்கள் முன்னிலையில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றார். அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த உற்றார், உறவினர்கள் மலர் தூவி புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் சென்றனர்.
ரிப்பன் பிணைப்பு
ரிப்பன் பிணைப்பு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள் பேட்ரிக் டெல்கடோவும், லாரன் ஜிமெனெஸ்சும். திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. கடந்த 2019ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2020ம் ஆண்டு தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர் பேட்ரிக்கும், லாரனும்.
ஆனால் கொரோனா இவர்களது திட்டத்தை மாற்றியது. எனவே மூன்று முறை அவர்களது திருமணம் தள்ளிப் போனது. எனவே நவம்பர் மாத இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தனர். சரியாக திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்தபோது, மணப்பெண் லாரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் மீண்டும் திருமணம் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டது. அதனை விரும்பாத மணமக்கள், இம்முறை எப்படியும் திருமணத்தை நடத்தியே தீருவது என உறுதியாக இருந்தனர். அதன்படி, மணமகள் தனது அறை ஜன்னல் அருகே இருக்க, மணமகன் கீழே நின்றுகொண்டு திருமண பந்தத்திற்கான உறுதிமொழியை ஏற்றனர். அப்போது இருவரும் நீளமான ஒரு ரிப்பனைக் கொண்டு தங்களது கைகளை இணைத்திருந்தனர். திருமணத்தின் போது இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்திருப்பது போன்ற உணர்வைப் பெற இப்படிச் செய்ததாக கூறியுள்ளனர்.
கவச உடையில் திருமணம்
கவச உடையில் திருமணம் இதுவும் மேலே பார்த்தது போன்ற சம்பவம் தான். ஆனால் நடந்தது இந்தியாவில். ராஜஸ்தான் மாநிலம் பாரா எனும் ஊரைச் சேர்ந்தவர் மணமகள். திருமணம் நடைபெற இருந்த நாளில் தான், மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர் அதே ஊரில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருமணக் கனவுகளோடு இருந்த தனது வருங்கால மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதே என கவலைப்பட்ட மணமகன், திட்டமிட்டபடி அன்றே திருமணத்தை நடத்தி முடித்து விடுவது என முடிவெடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையான அனுமதி பெற்று கொரோனா மையத்திலேயே அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. மணமக்கள் மற்றும் புரோகிதர்கள் என முக்கியமானவர்கள் மட்டுமே அத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் பிபிஇ எனப்படும் கொரோனா கவச உடை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வு திருமணம்
விழிப்புணர்வு திருமணம் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக தரப்பட்டதால், திருமண நிகழ்ச்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக களைகட்டத் தொடங்கியுள்ளது. கிடைத்த வாய்ப்பை கொண்டாட்டத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் விழிப்புணர்விற்கும் பயன்படுத்தியுள்ளனர் கோவில்பட்டியைச் சேர்ந்த மணமக்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொறியாளர்களான கௌதம் குமார், மனோகரி இருவரின் திருமணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் திருமண அழைப்பிதழ் முதல் அனைத்திலும் அரசு விதிமுறைகளை திருமண வீட்டார் கடைபிடித்தனர்.
மணமக்களை வாழ்த்தி விதவிதமான பேனர்கள் வைக்காமல் சமூக இடைவெளியின் அவசியத்தை வலியுறுத்தியும், முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேனர்கள் வைத்தனர். பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்க வேண்டிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் தெர்மா ஸ்கேனரையும் பயன்படுத்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு தாம்பூல கவர்களில் கபசுர குடிநீர் பாக்கெட்டுகளும், முகக்கவசமும் வழங்கப்பட்டது. அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொண்டாட்டங்கள் இருந்தாலும், கொரோனாவை எளிதில் வென்றிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் நடந்து முடிந்து பாராட்டுகளைக் குவித்தது.
பேஸ்புக் லைவ் திருமணம்
பேஸ்புக் லைவ் திருமணம் கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாபு என்பவருக்கும் பிரவீனாவுக்கும் ஊரடங்கிற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 26ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட, திருமணத்தை தள்ளி வைக்காமல் வித்தியாசமாக அதனை நடத்தி முடிக்க விக்னேஷ் முடிவு செய்தார்.
அதன்படி, ‘’ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு நிலைமை சீர் அடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். திருமணத்தை நேரடியாக ஃபேஸ்புக் லைவ் மற்றும் யூடியூப்பில் காணுங்கள்,” என சமூகவலைதளங்கள் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வித்தியாசமான அழைப்பிதழை அனுப்பினார். ஊரடங்கு தீவிரமாக இருந்த நிலையில் விக்னேஷின் இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலானது. கூடவே, திருமண விருந்திற்காக திட்டமிருந்த விருந்து உணவை குருடம்பாளையம் ஊராட்சியோடு இணைந்து உணவின்றி தவிக்கும் 2 ஆயிரம் பேருக்கு வழங்கி அப்ளாஸ்களை அள்ளினார் புதுமாப்பிள்ளை விக்னேஷ்.
நாட்டு எல்லையில் திருமணம்
நாட்டு எல்லையில் திருமணம் இந்தத் திருமணத்தில் மாப்பிள்ளை கனடாவைச் சேர்ந்தவர். மணமகளோ அமெரிக்காக்காரர். சர்வதேச விமானப் போக்குவரத்து கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட, கடந்த ஜூலை மாதம் இவர்களது திருமணம் இருநாட்டு எல்லையில் எளிமையாக நடந்து முடிந்தது.
கருத்துக்களேதுமில்லை