வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு செய்யப்பட்டார்.

செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது.

அந்தவகையில் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சு.ஜெகதீஸ்வரனும் சுதந்திரக் கட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராக பதவி வகித்த ஆ.அந்தோணியின் பெயரும் முன்மொழியப்பட்டன.

தெரிவிற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவம் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப். 03, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸின் 01 உறுப்பினரும் வாக்களித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அந்தோணி 6 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு அந்த கட்சியின்4 உறுப்பினர்களும்  ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.

இந்த நிலையில் மூன்று வருடங்களின் பின்னர் செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சு.ஜெகதீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.