இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட மாகாணசபை நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்: அமைச்சர் டக்ளஸ்…

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகள் தான் காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் தமிழ் தேசிய கட்சிகளின் தீர்வு திட்ட தயாரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய கொள்கையில் இருந்து நான் மாறவில்லை. சிறந்த ஆரம்பத்திற்கு ஒரு தீர்வு இருக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் இலங்கை – இந்திய ஓப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டம். அது எங்களிடம் இருக்கிறது. ஆயுதம் தூக்க முன்னர் திட்டம் இல்லை என்று சொல்லப்பட்டது. நாங்கள் ஆயுதம் தூக்கியதன் விளைவாக 1987 ஆம் ஆண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு பிறகு நடந்தது எல்லாம் போராட்டம் அல்ல. அது ஒரு அழிவு. அது வன்முறை யுத்தம். அது விடுதலைப் போராட்டம் அல்ல. அதனால் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தவற்றையும் அழிந்து விட்டு சென்றது.

அதனால் மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து செல்ல வேண்டும். முல்லைத்தீவில் கடற்தொழிலாளரின் பிரச்சனை தொடர்பில் கேட்க சென்ற போது ஒருவர் சொன்னார். 2017 ஆம் ஆண்டு சுமந்திரன் ஒரு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தார் என. அந்த திருத்த சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேட்டார். என்னுடைய அபிப்பிராயம் என்ன என்றால், சுமந்திரன் தான் அதனைக் கொண்டு வந்தார். நாங்களும் ஆதரவு அளித்தோம். அப்போது அவர்களது நல்லாட்சி என்கின்ற நாத்தல் ஆட்சி இருந்தது. ஏன் அவர்கள் அதை செய்விக்கவில்லை. அப்போது சுமந்திரன் தான் ஆட்சியை நடத்தினவர். அவர் அந்த அமைச்சருக்கு அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என சொல்லியுள்ளார். ஆனால், அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என எங்களிடம் இப்போது கேட்கிறார்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் நடந்தது. அது எங்களின் அரசியல் யாப்பில் இருக்கிறது. அது ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. அது நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தமிழ் தரப்பு தான் காரணம். நான் அதனை வெளிப்படையாக சொல்கின்றேன். யுத்தம் முடிந்த பின் எங்களது ஆட்சி வர நாம் மாகாண சபையை நடைமுறைப்படுத்தினோம். பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் அதனை தட்டிக் கழித்துக் கொண்டு இருந்தார்கள். இன்றும் அதனைத் தான் செய்யப் பார்க்கிறார்கள். ஆகவே தீர்வுத் திட்டம் என்பது ஏற்கனவே இருக்கிறது. நாம் அதில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

அவர்கள் இப்ப செய்யும் முயற்சி எல்லாம் பிரச்சனைகளை தீராப் பிரச்சனை ஆக்கும் செய்முறை. ஆனால் எங்களது நடைமுறை எல்லாம் பிரச்சனைகளை தீர்க்கும் நடைமுறை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பிரச்சனைகளை தீர்க்கும் விருப்பம் இல்லை.

தீர்வுத் திட்டம் எப்படி அமைய வேண்டும் என நாமும் அரசாங்கத்திடம் திட்டம் கொடுத்துள்ளோம். மாகாண சபையையில் மாற்றத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இருப்பதை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். 87 ஆம் ஆண்டு கிடைத்த மாகாணசபை. இன்று 33 வருடங்கள். அதனை ஏன் தமிழ் தரப்பு நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில் இரண்டு இயக்கங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து. பிரபாகரன் சுயலாப அரசியலால் அதனை தூக்கி எறிந்தார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிறேமச்சந்திரனாக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் குடித்து வெறித்து துஸ்பிரயோகம் செய்து விட்டார்கள். ஆகவே யார் காரணம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத தமிழ் தலைமைகள் தான் காரணம். தென்னிலங்கையை குறை சொல்ல முடியாது. அதில் ஒன்றும் இல்லை என்றால் ஏன் விக்கினேஸ்வரன் மாகாணசபையை எடுத்தவர். அது சரியானவர்களின் கையில் செல்ல வேண்டும்.

மாகாணசபை தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர கூறுவது அவருடைய கருத்து. நான் கூறுவது எனது கருத்து. அரசாங்கம் அது தொடர்பில் பேசும் போது பேசுவோம். அதில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.