ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆட்டம், பாட்டத்துக்கு கட்டுப்பாடு !
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மீண்டும் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பாடுபட்டு வரும் வேளையில், நேற்று முதல் அங்கு செயல்பாட்டுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள் உள்ளரங்க இடங்களில் நடனம், பாடுதல், ஓதுதல் ஆகிய நடவடிக்கைகளைத் தடை செய்கிறது. சிறிய அளவிலாக திருமணம், சமய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் நூறாயிரக்கணக்கான மக்கள் முடக்கநிலையின் முதல் நாளை எதிர்கொண்டநிலையில் நேற்று அங்கு மேலும் 40 புதிய தொற்றுகள் பதிவாகின. இது ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் வியாழன் அன்று ஏற்பட்ட தொற்று எண்ணிக்கையை 78 ஆக்கி உள்ளது.
பல கடற்கரை புறநகர்ப் பகுதிகளில் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கிருமிப் பரவலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்கள் இப்பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகியவை கிரேட்டர் வடக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தோருக்கு எல்லைகளை மூடிவிட்டன. சிட்னியிலிருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை இன்று முதல் அறிவித்துள்ளன.
இதனால் இன்று சிட்னி உள்நாட்டு விமான நிலையம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. கிறிஸ்மஸ் விடுமுறைப் பயணங்களை மேற்கொள்வோர் பயணத்தடைக்கு முன்னர் சிட்னி செல்லவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ அவசரப்பட்டனர்.
இதற்கிடையே, சிட்னிக்கும் தஸ்மேனியாவின் ஹோபார்ட்டுக்கும் இடையேயான 76வது படகோட்டும் போட்டி முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 1945 முதல் நடைபெற்று வந்த சிட்னிக்கும் தஸ்மேனியாவுக்கும் இடையிலான சுமார் 630 கடல்மைல் தூரத்தை கடக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படகுப்போட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும்.
கருத்துக்களேதுமில்லை