பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால்மரணம் எண்ணிக்கை அதியுச்சமடையும் – தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு எச்சரிக்கை

பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் பரவல் எமது கட்டுப்பாட்டைமீறி, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் உருவாகக்கூடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதியுச்சமடையும்.”

– இவ்வாறு தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“வழமையாக டிசம்பரில் இறுதி இரு வாரங்களிலும், ஜனவரி முதல் வாரத்திலுமே நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நீண்டதொரு விடுமுறை வழங்கப்படுவதால் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லுதல், கொள்வனவுகளில் ஈடுபடுதல், சுற்றுலா செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இக்காலப்பகுதியில் வீடுகளில் இருப்பவர்களைவிடவும் வெளியில் பலர் இருப்பார்கள். ஆனால், இம்முறை அவ்வாறு செயற்பட முடியாது – செயற்படவும் கூடாது. மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டிய காலப்பகுதி இதுவாகும்.

குறிப்பாக மேல் மாகாணத்திலும், கொழும்பு மாநகர எல்லையிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. எனவே, இப்பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு சென்றால், அவ்வாறு செல்பவர்களில் எவருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் அவர்கள் செல்லும் பகுதிகளிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் வைத்திய ஆலோசனை பெறவும். முடிந்தளவு வீட்டிலேயே இருக்கவும். வயது வந்தவர்கள், நாட்பட்ட நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் வெளியில் வருவதை தவிர்த்தக்கொள்வதே பாதுகாப்பானதாக இருக்கும். அத்துடன் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்படவேண்டும். ஏனெனில் மக்களின் நடத்தையை பொருத்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

அதேவேளை, உலகில பல நாடுகளில் கட்டுப்பாட்டைமீறி நாளாந்தம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையில் இன்னும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகவில்லை. கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய நிலைமையே காணப்படுகின்றது. இதனால்தான் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து மக்களும், நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் வைரஸ் பரவலை நிச்சயம் கட்டுப்படுத்தமுடியும். பரவலை குறைந்த மட்டத்தில் வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அவ்வாறான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் வைரஸ் பரவல் என்பது எமது கட்டுப்பாட்டைமீறி மேற்குலகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியது போல் வேகமாக பரவக்கூடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதியுச்சமடையும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.