யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை: ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பியுடனும் முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம் – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை அறிவிப்பு
யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்துவோம். அத்துடன் எதிர்வரும் 23ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே யாழ். மாநகர சபையில் மேயருக்கு யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் தீர்மானிப்போம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் எமக்குச் சில சபைகளின் வரவு – செலவுத்திட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கின. அந்த அடிப்படையில் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றிலும் அந்தக் கட்சியினரின் ஆதரவைக் கோரி இருந்தோம். ஆனால், அவர்கள் அந்தச் சபைகளில் எங்களைத் தோற்கடித்தனர்.
எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குறித்த சபைகளின் உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு சபைகளிலும் மேயர் மற்றும் தவிசாளர் பதவிக்கு யாரைப் பிரேரிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படும்.
அத்துடன் இரண்டு சபைகளிலும் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈ.பி.டி.பியுடனும் மீண்டும் பேச்சு நடத்துவோம். அந்தப் பேச்சு நேரில் நடைபெறும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை