20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்சமன்றில் மனு!
கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தங்களது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் வைத்திய அறிக்கையை பெற்று விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு 13ஐச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த, 20 நாட்களேயான குழந்தையொன்று, இலங்கையில் 143ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தை நியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, அவையவங்கள் செயலிழந்த நிலையில், கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் குறித்த குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு கொரோனா தொற்று பீடிக்கப்படாத நிலையில் குழந்தைக்கு மாத்திரம் கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த குழந்தையின் தகனத்தை அடுத்து, நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளியிடு வருவதோடு, முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பொதுத் தளங்களில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை