ஜனவரி 10 முதல் மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக நெற் செய்கை அறுவடையினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானம்
மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி 10 ஆந்திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் ஏற்பாட்டில் பெரும்போக நெல் அறுவடைகளை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்வது தொடர்பாக கூட்டம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திர காந்தன் தலைமையில் இன்று (30) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற் கொள்ள ப்பட்டது.
இதன் முதற்கட்டமாக 18 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜீ. நிமால் எக்கநாயக தெரிவித்தார்.
மேலும் இம்மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை களுஞ்சியப்படுத்துவதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள களஞ்சியங்கள் மற்றும் மேலதிகமாக தேவைப்படும் களஞ்சியங்கள் போன்றவற்றினை பெற்றுக் கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதவிர விவசாயிகளின் நெல்லினை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மாவட்டத்தில் நவீன முறையில் நெல் காயவைக்கும் 20 இடங்களை தெரிவு செய்து அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இம்முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்தி 74 ஆயிரத்தி 919.75 ஏக்கர் வயல் நிலத்தில் 48 ஆயிரத்தி 394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 2 இலட்சத்தி 44 ஆயிரத்தி 886 மெற்றிக்தொன் நெல் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 10 வீதமான நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை