ஜனாஸா நல்லடக்கத்திற்கான அனுமதி பெற அரச உயர்மட்டத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்-கல்முனை மாநகர முதல்வர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாவால் மரணித்த ஒருவரது ஜனாஸாவை தகனம் செய்வதற்கு அவசர முயற்சி எடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க உயர்மட்டத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது விடயமாக அவர்  நேற்று  செவ்வாய்க்கிழமை (05) ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

கொரோனாவால் மரணித்த ஒருவரது ஜனாஸா தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்காளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பிலான மரண விசாரணை அறிக்கைக்கு உத்தரவிடக் கோரிய அதேவேளை, அத்தகைய விசாரணைக்கான அவசியம் எமக்கு எழவில்லை எனவும் அந்த உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிமன்றம், மரண விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் அதேவேளை உடலத்தை தகனம் செய்வதற்கு தம்மால் அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்து, குறித்த வழக்கை தவிர்த்து (No Order) வைத்துள்ளது.

இந்நிலையில் இப்பகுதி சுகாதார மேலதிகாரிகள், இவ்வழக்கு விடயத்தில் விளங்கிக்கொள்ள முடியாதளவுக்கு தவறான பொருள்கோடல் செய்து, நீதிமன்றம் இவ்வுடலத்தை தகனம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் அதனை செய்யாதிருப்பது நீதிமன்றத்தை அவமதித்ததாக அமைந்து விடும் எனவும் தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் காரணமாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின்பேரில் குறித்த ஜனாஸாவை தகனம் செய்வதற்கான முயற்சிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

எவ்வாறாயினும் மேற்குறித்த கட்டளைக்க்கெதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமாயின் அதனை மேல் நீதிமன்றத்திலேயே மேற்கொள்ள முடியும். எனினும் கல்முனை மேல் நீதிமன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்குரிய செயற்பாடுகள் நாளை 06ஆம் திகதி புதன்கிழமையே ஆரம்பமாவதால் அன்றைய தினத்திலேயே மீளாய்வு மனுவை தாக்கல் செய்ய முடியும்.

இந்நிலைமையை நமது சமூகம் உன்னிப்பாக அவதானித்து, மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட முன்வர வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் எமது முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அரசியல் உயர்மட்டங்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் அரச நிர்வாகங்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, சாத்தியப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இது விடயத்தில், இந்த அரசாங்கத்தில் நேரடியாக அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளும் பங்காளிக்கட்சிகள் என்று சொல்லிக்கொள்வோரும் எதிர்க்கட்சியினர் குழப்பி விட்டனர் என்று புராணம் பாடிக்கொண்டிருக்காமல், தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து இப்பிரச்சினைக்கு அவசரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமான முயற்சிகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.