டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்: 4 பேர் பலி; 52 பேர் கைது
ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஜோ பைடன் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள் என பதிவிட்டார்.
தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் பொலிஸார் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்குத் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது நேற்று மதியம் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கதவை உடைத்து அத்துமீறி நுழைய முயன்றனர். அந்த கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இதேபோன்று மருத்துவ சிகிச்சையில் பலனின்றி 4பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, கலகத்துடன் தொடர்புடைய 52 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை