முககவசங்கள் இன்றி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் அட்டகாசம்! குடி நீரை துண்டித்ததால் மக்கள் அவதி!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரொணா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாது முக கவசங்கள் இன்றி வீட்டு வளாகத்திற்குள் நுழையும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கொரொணா வைரஸ் தாக்கம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் கஷ்டப்பட்டு வரும் நிலையில் எந்த வித மனிதாபிமானமும் இன்றி மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை பணம் செலுத்தாது இருந்த பல சமூர்த்தி உதவி பெறும், வறுமையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.
இவ்வாறு குடி நீர் இணைப்பை துண்டிக்க வரும் மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் எந்த வித சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் கைக்கொள்ளாது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரொணா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார நடைமுறைகளை மீறி அவசர அவசரமாக குடிநீர் இணைப்பை துண்டித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒரு புறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,மறு புறம் கொரோனா அச்சம் காரணமாக பல குடும்பங்கள் வருமானத்தை இழந்து தவிக்கும் நிலையில் குடி நீரை துண்டித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் முழுக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் குடி நீர் இணைப்பை தருவோம் என்று கூறுவது இந்த அனர்த்த காலத்தில் எந்த வகையில் நியாயம்.
வீடுகளில் உள்ள கிணறுகள் எல்லாம் வெள்ளத்தில் நிறம்பி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் குடிநீரை துண்டிக்க வேண்டாம் அரைவாசி பணத்தை செலுத்துகிறோம் மீதியை பின்னர் செலுத்துகிறோம் என்று வறுமையில் உள்ள குடும்பங்கள் கெஞ்சிய போதும் “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அரசாங்கம் ஓடர் போட்டுள்ளது அதைதான் நாங்கள் செய்வோம்” என்று எந்த வித மனிதாபிமானமும் இன்றி குடிநீரை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் வாழ்வாதார குறித்து செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட கொரோணா செயலணி இது போன்ற மனிதாபிமானம் அற்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய செயற்பாட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது. மாவட்ட அரசியல் தலைவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை