முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் என்னிடம் கூறியுள்ளார்-த.சித்தார்த்தன்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு சென்றனர். பின்னர், பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்து பேசினர். இது தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
“எனக்கு அதிக அரசியல் அழுத்தம் இருந்ததாக அவர் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக கூறினார். இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.
போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில்- நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளென்.
நாம் மீண்டும் தூபியை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறுவது உள்ளிட்ட விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்“ என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை