பிரதமரின் தலையீட்டுடன் திரைப்பட துறைக்கு ஈராண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு இன்று (11) சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இத்தினத்தில் இது குறித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படும். 2023 ஆண்டு முதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுவரை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பல்வேறு சதவீதங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டது. இப்புதிய ஒப்புதலுக்கமைய முழு நாட்டிற்கும் ஒரு பொழுதுபோக்கு வரி அறிமுகப்படுத்தப்படும்.
உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணி, இலங்கை திரைப்பட இயக்குநர் சங்கம், இலங்கை திரைப்பட காட்சிபடுத்துனர் சங்கம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பல கலைஞர்கள் கடந்த 8ஆம் திகதி பிரதமரை சந்தித்து கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
அவர்களின் பிரதான கோரிக்கைகளில் பொழுதுபோக்கு வரியை நீக்குமாறும் கோரப்பட்டது. அதற்கமைய கௌரவ பிரதமரின் தீர்மானத்திற்கேற்ப இன்றைய தினம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை