ஏறாவூர், பொத்துவில், இறக்கமாம், உட்பட கிழக்கின் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பதில் தவிசாளர்கள் நியமனம் !
கிழக்கு மாகாணத்திலுள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதில் தவிசாளர்கள், மாகாண ஆளுநர் அனுராதா யகம்பதினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் நகர சபை, அம்பாறை நகர சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்கமாம் பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை, ஆரையம்பதி பிரதேச சபை, வாகரை பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை, சேருவில பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கே பதில் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பதினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை முடியும் வரை மேற்குறிப்பிட்ட 10 உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள தற்போதுள்ள தவிசாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, அம்பாறை நகர சபை தவிசாளர் மனோதர ஆசாரிகே சமிந்த சுகத், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஹம்மது சரிபு அப்துல் வாசித், பதியத்தலாவ பிரதேச சபை தவிசாளர் ஹேரத் முதியன் சேலாகே லலந்த சுமித் செனவிரத்ன, இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஜமால்தீன் கபீப் றஹ்மான், ஏறாவூர் நகர சபை தவிசாளர் இறம்ழான் அப்துல் வாஸித், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், வாகரை பிரதேச சபை தவிசாளர் சிவஞானம ; கோணலிங்கம் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஹாரூன் தாலிப் அலி, சேருவில பிரதேச சபை தவிசாளர் எரெவ்பொலே கெதர ரணசிங்க பண்டா ஆகியோரே தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாட்டினை கொண்டு செல்வதற்காக பிரதி தவிசாளர்களை பதில் தவிசாளர்களாக ஆளுநர் நியமித்துள்ளார்.
இதற்கமைய, அம்பாறை நகர சபையின் பதில் தவிசாளராக துலிப லால் குமாநாயகே, பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளராக பெருமாள் பார்த்தீபன், பதியத்தலாவ பிரதேச சபையின் பதில் தவிசாளராக கோணபுர முதியன்சேலாகே தினேஷ் பராக்கிரம, இறக்காமம் பிரதேச சபையின் பதில் தவிசாளராக அகமடலெப்பை நௌபர், ஏறாவூர் நகர சபையின் பதில் தவிசாளராக மீராலெப்பை ரெபுபாசம், ஆரையம்பதி பிரதேச சபையின் பதில் தவிசாளராக மாசிலாமணி சுந்தரலிங்கம், வாகரை பிரதேச சபையின் பதில் தவிசாளராக தி.மு. சந்தரபாலன், வாழைச்சேனை பிரதேச சபையின் பதில் தவிசாளராக தர்மலிங்கம் யசோதரன், தம்பலகாமம் பிரதேச சபையின் பதில் தவிசாளராக அம்பகஹவத்தே கெதர சம்பிக்க பண்டார, சேருவில பிரதேச சபையின் பதில் தவிசாளராக திருமதி கோலன்வெல விதான ஆராச்சிலகே சந்தரகாந்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பதினால் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் 2021ஆம் நிதியாண்டிற்கான வரைபு பாதீட்டிற்கு அமைய சமபளங்களும் கொடுப்பனவுகளும், பயணப்படிகள், காகிதாதிகள், பயனபாட்டுச் செலவுகள் மற்றும் LDSP செயற்றிட்டம் தொடர்பான செலவுகள் ஆகியவற்றினை 2021.01.01ஆம் திகதியிலிருந்து விசாரணை முடிவுறும் காலப்பகுதி வரை அனுமதிப்பதற்கும் அங்கீகாரத்தினை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களுக்கு மாகாண ஆளுநர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை