மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை துரிதமாக ஏற்படுத்துங்கள் – மஹிந்த ராஜபக்ஷ
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (09) தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின்போது குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை குறிப்பிட்டார்.
காலத்துடன் போராடி ஐந்து வருட காலத்தில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி ஏற்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரதமர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்ய தேவையான பலமும் அனுபவமும் கொண்ட அரச அதிகாரிகள் குழு எங்களிடம் உள்ளது என தெரிவித்த கௌரவ பிரதமர், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக எழக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் கூறினார்.
நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சிற்கு சொந்தமான மற்றும் அவற்றில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கௌரவ பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.
தனது இராஜாங்க அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா அவர்கள், சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
களனி ஆற்றின் வடக்கே சுமார் 400 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியம் உள்ளது என்று இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) எம்.ஆர்.டபிள்யூ டி சொய்சா அவர்கள் தெரிவித்தார்.
பேர ஏரியை சுத்தம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதை தேவையான நிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய சிக்கலாக வினங்குவர் கொழும்பு நகர சபையின் குப்பைகளை அகற்றும் செயல்முறையாகும் என்றும் அவர் கூறினார்.
பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் சிறு குளங்களை புனரமைத்தல் மற்றும் கொழும்பைப் போலவே 21 மாவட்டங்களிலும் உடற்பயிற்சிக்கான இடங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்களுடன் 21 பூங்காக்களை நிறுவ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் பரிந்துரைகளின் பேரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்குவது ஒரு பிரச்சினை என்று தெரியவந்தது. சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொள்பவர்களை கைது செய்ய நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில், கடலரிப்பைத் தடுக்க நாடு முழுவதும் 22 கடலோர வேலை தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை கருத்தில் கொண்டு பொத்துவில் மற்றும் அருகம்பே பகுதிகளின் கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்க கடலோர பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், யாழ்ப்பாணம் மணல்காடு மணல் மேடுகளை இந்த திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பாதுகாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான வீதிகளிலிருந்து கடற்கரையை அண்மித்த வீதிகளுக்கு மக்களுக்கு காணப்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த அரசாங்கத்தின்போது செயற்படுத்தப்பட்ட கடன் மேம்பாட்டு திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஊழியர்களை பராமரிப்பதற்கு மில்லியன் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டமை குறித்த கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார்.
அத்திட்டங்களுக்காக செலவிடப்படுவது நாட்டின் பணம் என்பதால் அவை வீணாகாமல் தடுக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வேகமாக உயர்வடைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்த மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
உலக வங்கி திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்ட 35 கொழும்பு மெட்ரோ திட்டங்களில் 26 இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 9 திட்டங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பொறியியலாளர்களின் அறிவை எதிர்காலத்தில் இந்த திட்டங்களுக்கு பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மெட்ரோ சாலை அமைப்பை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார். 2019 ஆண்டளவில் கொழும்பு பேருந்துகளின் சராசரி வேகம் மணிக்கு 10-15 கி.மீ வேகத்தை எட்டியுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் அந்த வேகம் மணிக்கு 4-5 கி.மீ ஆக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையை தவிர்த்துக் கொள்வதற்கு கொழும்பிற்கான அணுகலை உள்ளடக்கியதாக ராகம, மொரட்டுவ, மாகும்புர மற்றும் கடவத்தையிலிருந்து தொடங்கும் மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினசரி இழக்கும் ரூ .1000 மில்லியனை ரூ .450 மில்லியனாகக் குறைக்கக்கூடும். அதன்படி, 4 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படக்கூடிய இந்த திட்டம் தொடர்பாக பிரதமரின் ஆதரவின் கீழ் எதிர்காலத்தில் நிதி அமைச்சில் முடிவு எடுக்கப்படும்.
குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, மேலதிக செயலாளர் சுதத் யாலேகம, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை