செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.
புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருகின்றன.
அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.
இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.
இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை