முல்லைத்தீவு -இந்துபுரம் பிறீமியர் லீக்; கிண்ணத்தை தனதாக்கியது முல்லை மெர்சல் அணி!
முல்லைத்தீவு – இந்துபுரம், பீனிக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய இந்துபுரம் பிறீமியர் லீக், எனப்படும் மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் முல்லை மெர்சல் அணியினர் கிண்ணத்தினைத் தனதாக்கிக்கொண்டனர்.
குறிப்பாக இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களை நான்கு அணிகளாகப் பிரித்து, அந்த நான்கு அணிகளில் ஒவ்வொன்றிலும் வேறு விளையாட்டுக்கழக வீரர்கள் மூவர் உள்ளடங்கலாக, ஒவ்வொரு அணிக்கும் ஒன்பது வீரர்களைக்கொண்டதும், பத்துப் பந்துப் பரிமாற்றங்களைக்கொண்டதுமான கிரிக்கட் சுற்றுத் தொடராக இந்த இந்துபுரம் பிறீமியர் லீக் அமைந்திருந்தது.
இந் நிலையில் இந்த கிரிக்கட் சுற்றுத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் சிறந்த பெறுபேறுளைப் பெற்ற முல்லை மெர்சல், மற்றும் ஜெப்னா ஸ்டலியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.
அந்தவகையில் 27.02.2021 அன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும், முல்லை மெர்சல் ஆகிய அணிகள் மோதின.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர்
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய முல்லை மெர்சல் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்கள் நிறைவில், 5விக்கட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
துடுப்பாட்டத்தில் முல்லை மெர்சல் அணிசார்பில் அன்ரனி, மற்றும் அருள்வெச்சி ஆகியோர் தலா 21ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பில் ஜது 2விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து 94 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் 09.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 70ஓட்டங்களை மாத்திரமேபெற்றுத் தோல்வியடைந்தனர்.
துடுப்பாட்டத்தில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிசார்பில் தஜி 28ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் முல்லை மெர்சல் அணிசார்பில் வினோஜன் 3விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் இதன்போது இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடைய அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சீருடை அறிமுகத்திற்கான போட்டிஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர்சேவை உத்தியோகத்தர் செ.சுஜிதரன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர்சேவை உத்தியோகத்தர் த.இரதீசன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் கழக சமேளனத் தலைவர் த.அஜந்தன், ஏர்நிலம் அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை