சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இதனால் உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது.
கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வாரங்கள் பிடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அதிக சிரமங்களுக்கு இடையே அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
குறுகிய காலத்துக்கு நிறுவனங்கள் அவற்றின் கப்பல்களை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை.
கப்பல் அங்கு சிக்கியிருப்பதால் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் சுமார் 12 வீதமான பொருட்கள் சுயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றன.
இதேவேளை, மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தைகளில் மசகு எண்ணெய் விலை 4 வீதம் உயர்ந்துள்ளது என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் இந்த நெரிசலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கெப்லர் எரிசக்தி புலனாய்வுச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
சுயஸ் கால்வாயில் இதுவரை தரைதட்டிய மிகப்பெரிய கப்பல் இதுவாகும் என்றும் கரையோரமாகத் தரை தட்டியதால், மீண்டும் மிதக்கும் திறனை அது இழந்து விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கப்பலை இயக்க முடியாத பட்சத்தில், அந்த அதிக அலைச் சூழலில் சரக்குகளை அகற்றும் பணியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் பயணிப்பதாக சுயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.
2017 ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுவைப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை