இந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.
இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், திரு. ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் கௌரவ பிரதமரினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்து பண்பாட்டு நிதியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
நாம் இன்று ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை’ நோக்கிப் பல சவால்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றினை உருவாக்குவது எமது பிரதான இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு திறம்பட செயற்பட்டு வருகின்றது.
இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஆன்மிகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்படுவது மிக முக்கியமானதாகும். அதற்கு ஒரு நபர் பின்பற்றும் மதம் உதவியாக அமையும். இந்த நாட்டில் நாம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை ஏனைய மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் தத்தம் மதங்களைப் பின்பற்றுவதற்கும், அவரவர் மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கும் இந்நாட்டில் எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக எமது நாட்டில் மத நல்லிணக்கத்துடன் கூடிய சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கின்ற இந்துப் பண்பாட்டு நிதியத்தின் செயற்பாடு மிக முக்கியமானது.
இந்த இந்துப் பண்பாட்டு நிதியம், 1985 ஆம் ஆண்டு, 31 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கைத்தீவில் வாழ்கின்ற இந்துக்களுக்கான சுபீட்சமானதொரு சூழலை உருவாக்கி, சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
இலங்கைத் தீவில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களது சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் பொறுப்பு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கும் உண்டு.
இந்துப் பண்பாட்டு நிதியம் தனது இலக்கினை அடைவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். இந்த நிதியத்தின் செயற்பாடுகளை மேன்மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனம் இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்து அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஒழுக்க ரீதியயிலும் சிறந்த இளம் தலைமுறையை உருவாக்குவதற்கு நீங்கள் தலைமைத்துவம் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேபோன்று பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களின் தேவைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
அத்தேவைகளை பூர்த்திசெய்து இந்துப் பண்பாட்டு நிதியத்தின் இலக்கை அடைவதன் மூலம் சிறந்த இலங்கை சமுதாயத்தை உருவாக்குவதற்கு செயலாற்றுவது உங்களது பொறுப்பாகும்.இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மூலமாக சிறப்பான சேவையாற்றுவதற்கு இந்துப் பண்பாட்டு நிதிய உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதான திரு.யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, பிரதமரின் இணைப்பாளர் திரு.செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை