நாட்டில் புரையோடிய அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் கடந்த கால ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கத்தை உருவாக்காமல் விட்ட அரசியல் பிழைகளே – முஷாரப்

[நூருல் ஹுதா உமர்]

சகல இனமும் வாழும் பிரதேசமே பொத்துவில். நாட்டில் இப்போது உள்ள அதிகமான பிரச்சினைகளுக்கு காரணம் இனநல்லிணக்கம் இல்லாமையே. இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் இலங்கையர்களிடையே தேசப்பற்றையும் உருவாக்க வேண்டும். அதன் மூலமே அழகிய அபிவிருத்தி அடைந்த சுபீட்ஷமான நாடாக இலங்கையை உருவாக்க முடியும். கடந்த கால அரசாங்கங்கள் விட்ட தவறே நாடு இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட காரணமாக அமைந்தது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுனபின் தெரிவித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக் கலந்து கொண்ட இலங்கை – பாகிஸ்தான் நட்புறவுக்கான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பொத்துவிலில்  இடம்பெற்ற போது அந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், பொத்துவில் பிரதேசம் மூவின மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற பிரதேசமாக உள்ளது. அதனடிப்படையில், முழுநாட்டுக்கும் இன நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றுக்கு முன்மாதிரியாக கொண்ட ஊராக பொத்துவிலை மாற்ற வேண்டியதே எனது முதல் குறிக்கோள்.

பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் காணப்படும் பல நல்ல பண்புகளில் ஒன்றாக சகவாழ்வு இருக்கிறது. ஆனால் ஏனைய நாடுகளில் இல்லாத பல சிறப்பியல்வுகளும், சகல வளமும் உள்ள நாடே இலங்கை. எமது நாட்டில் இனங்களுக்கிடையே நல்லுறவை கட்டியெழுப்பினால் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்ல முடியும். பொத்துவிலில் தண்ணீர், காணி என பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றை ஒற்றுமையுடன் ஒரே குரலில் கடந்த காலங்களில் தீர்வுக்காக பேசியிருந்தால் எம்மால் சாதித்திருக்க முடியும். ஒற்றுமையாக எமது பிரச்சினைகளுக்காக பொத்துவில் மக்களாகிய நாம் ஒன்றிணைந்து வெல்ல இனி அணிசேர வேண்டும் என்பதுடன் இனநல்லிணக்கம், தேசப்பற்று ஆகியவை மூலமே அழகிய அபிவிருத்தி அடைந்த சுபீட்ஷமான நாடாக இலங்கை உருவாக முடியும் எனவும், இன நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று பாகிஸ்தான் உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பொதிகள், விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுனபினினால் பொத்துவில் எல்லைப் புற கிராமத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைத்துத் தருவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அதற்கான செயற்றிட்ட வரைபுகள், ஆவணங்கள் என்பன உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.