திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவம் இவ்வருடம் இடம்பெறாது-30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமையால் நிருவாகம் தீர்மானம்

[வி.சுகிர்தகுமார் ]

  வராலாற்று பிரசித்த பெற்ற தேசத்து கோயிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்;சவம் இவ்வருடம் இடம்பெறாது என ஆலயத்தின் தலைவர் எஸ்.சுரேஸ் இன்று தெரிவித்தார்.

தீர்த்தோற்வசம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் முகமாக ஆலய மண்டபமொன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்  குறித்த ஆலயமானது கிழக்கிலே பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கு பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றெனவும் இது தேசத்து கோயில் என்பதுடன் பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரைக்குமான 15 கிராம மக்களின் திருவிழா மற்றும் நிருவாக கட்டமைப்பை கொண்டதெனவும் கூறினார்.

மேலும் அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக வர்த்தமானியிலும் இணைக்கப்பட்ட ஆலயம் என்பதுடன் ஆலய உற்சவம் தொடர்பாக பிரதேச செயலக மட்டத்தில் முடிவெடுக்கப்படும் வரலாற்றை கொண்டதெனவும் கூறினார்.

இதற்கமைவாக கடந்த 12ஆம் திகதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆலய உற்சவத்தில் 30பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் பல்வேறு சட்டத்திட்டங்களுக்கு அமையவே திருவிழா நடைபெற வேண்டும் எனவும் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

ஆனாலும் சுகாதார அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு அமைய 50 பேர் வரையில் அனுமதி தருமாறும் அவ்வாறு அனுமதி தரும் பட்சத்தில் மிகவும் பாதுகாப்புடன் சிறிய அளவில் திருவிழாவை நடத்துகின்றோம் எனவும் அக்கூட்டத்தில் தான் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இந்நிலையில் சுகாதாரத்துறையினரின் முடிவு மாறலாம் என இன்றுவரை எதிர்பார்த்தோம்.

ஆனாலும் அவர்கள் பிரதேச சுகாதார பாதுகாப்பு நிலையினை கருத்திற்கொண்டு அவ்வாறு அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மக்களது பாதுகாப்பு நிலை கருதி அந்த முடிவை எடுத்தது சரியென அவர்களுக்கும் எங்களுக்கும் தென்பட்டாலும் நிருவாகம் எனும் ரீதியில் சாத்தியமற்றது என்பதுடன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களை போல் எமக்கும் உள்ளது என்றார்.

இதன் அடிப்படையில் ஆலய தலைவர் மற்றும் பிரதம குரு தலைமையில் ஒன்றிணைந்த நிருவாக சபை 30 பேருடனும் நிறைந்த கட்டுப்பாட்டுடனும் திருவிழா நடாத்துவது சாத்தியமற்றது எனும் அடிப்படையில் இவ்வருடம் திருவிழாவை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளோம் என்றார்.

ஆகவே இது தொடர்பில் பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் ஆலய உபதலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.