நெய்வேலி பேருந்து நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயரைச் சூட்டுக! வைகோ வேண்டுகோள்…
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள திருக்கண்டலேஸ்வரம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார் தி.மா.ஜம்புலிங்க முதலியார். வேளாண்மை தொழிலிலும், ஜவுளி வர்த்தகத்திலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்டக்குழு தலைவர், கடலூர் நகர மன்றத் தலைவர், நெல்லிக்குப்பம் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று, சீரிய மக்கள் தொண்டு ஆற்றினார். சென்னை பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
மக்கள் சேவையில் சிறந்தோங்கிய ஜம்புலிங்க முதலியார் அவர்கள் நெய்வேலியில் இருந்த தனது விவசாய நிலத்தில் தண்ணீருக்காக புதிய கிணறு தோண்டும்போது, கறுப்புநிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அப்போதைய பிரிட்டிஷ் அரசின் புவியியல் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். பின்னர் அவரே தனது சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கடியில் நிலக்கரி படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
நாடு விடுதலை பெற்றவுடன், அன்றைய முதலமைச்சர் இராஜாஜி அவர்களைச் சந்தித்து நெய்வேலி நிலக்கரி படிமங்கள் புதையுண்டு இருப்பதை எடுத்துக் கூறினார். அதன்பின்னர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வர் ஆனவுடன் அவரையும் சந்தித்து நிலக்கரி கனிமவளம் நிறைந்து கிடப்பதை விளக்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலுடன் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களையும் சந்தித்து, நிலக்கரி கனிமவளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார். ஆனால் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கூறி நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்தத் தயங்கியது.
அப்போது திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் தனக்குச் சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் தமிழ்நாடு அரசுக்குக் கொடையாக வழங்கினார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய்க்கு மேலாகும்.
பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதற்கும், நாட்டின் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும் என்.எல்.சி. நிறுவனம் உருவாக அடித்தளமிட்டவர் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்கள்.
இன்று பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மிகச் சிறந்த ‘நவரத்னா’ தகுதி பெற்று வளர்ந்திருக்கிறது.
கொடைவள்ளல் ஜம்புலிங்க முதலியார் அவர்களுக்கு நெய்வேலி நகரியத்தில் சிலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்கிறது நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம்.
மேலும் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், நெய்வேலி மந்தாரகுப்பத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை