கையை விரிக்கும் உலக நாடுகள்: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தோனேசியாவில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் அகதிகள்.
மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குறைத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா முடக்கநிலை நடைமுறையில் உள்ள நிலையில் இப்போராட்டம் நடைப்பெற்றிருக்கிறது.
இந்தோனேசியாவில் சுமார் 14 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் இருக்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக தஞ்சமடைய இந்தோனேசியா வந்தவர்கள் எனப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான் அமைப்பின் வசம் சென்றுள்ள நிலையில், காபூலில் இருந்து தங்களது நாட்டவர்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களை மேற்குலக நாடுகள் மீட்கும் நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் பல ஆண்டுகளாக தவித்து வரும் ஆப்கான் அகதிகள் நிலை குறித்து பெரிதும் பேசப்படாமலேயே இருக்கிறது.
அத்துடன் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. முன்பு ஆண்டுக்கு 18,750 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த எண்ணிக்கை 13,750 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்பாக பேசியுள்ள ஆப்கான் அகதி ஒருவர், “இந்தோனேசியாவில் உள்ள கொரோனா நிலை குறித்து நன்கு அறிந்திருக்கிறோம். எவ்வித ஒன்றுகூடலுக்கோ போராட்டத்திற்கோ இந்த ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லை என இந்தோனேசிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். எங்கள் குரல்களை உயர்த்தி உலகத்திற்கு எங்கள் பிரச்சனைகளை சொல்வதைத் தவிர வேறு வழிகள் எங்களுக்கு இல்லை,” எனக் கூறியிருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த இவருக்கு இதுவரை மீள்குடியமருவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
கருத்துக்களேதுமில்லை