ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும்
ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கடந்த 13.10.2021 அன்று, இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது, அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோரை சந்தித்து பேசிய எம்.எம்.நரவனே, இரண்டு நாட்டு உறவு குறித்தும், கடல் பாதுகாப்பு குறித்து, ராணுவ போர் இணை பயிற்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், ஆண்டுந்தோறும் சிங்கள ராணுவத்தை சேர்ந்த 1000 பேருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கவும், கூடுதலாக 50 ராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளிக்கவும் இப்பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 2009-ல், சிங்களப் பேரினவாத அரசால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பு போரில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குழந்தைகள் என்றும் பாராமல் ராணுவ வாகனங்கள் ஏற்றிக்கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானர்கள்.
இப்படியான துயரங்கள் அரங்கேறி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழர்களுக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.
ஆனாலும், நீதி கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் ஐ.நா வாசலில் நின்று கொண்டிருக்கிறோம்.
அதோடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்க கோரி இந்திய அரசிடம் வேண்டி நிற்கிறோம். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், போர்க்குற்றவாளியான சிங்கள பேரினவாத அரசுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு மேற்கொள்வது எந்த விதத்தில் நியாயம்.
சிங்கள கடற்படையால் நாள்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அழுக்குரலையெல்லாம் காது கொடுத்து கேட்காத இந்திய அரசு, சிங்கள பேரினவாத அரசுடன் நல்லுறவை பேணுவது வேதனை அளிக்கிறது.
சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது என்பது மிச்சம் மீதி இருக்கிற ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
ஏற்கனவே, ஈழப்பகுதிகளில் மீண்டும் ஒரு எழுச்சி வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், ஏராளமான மதுக்கடைகளை திறந்தும், விபச்சார விடுதிகளையும் திறந்தும் தமிழ் இளைஞர்களை சீரழித்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு.
எனவே, போர்க்குற்றவாளியான இலங்கை அரசுடன் ஒத்துழைப்பை பேணிவதை விடுத்தும், அந்நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். மேலும், போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க இந்திய முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
கருத்துக்களேதுமில்லை