தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளில் மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு என்ற அரசு ஆணைகளையும், சட்டங்களையும் இயற்றியுள்ளன. சமீபத்தில், ஆந்திரா, பாஜக ஆளக்கூடிய அரியானா, ஜார்க்கண்ட அரசுகளும், தனியார் துறையில் 75 விழுக்காடு மண்ணின் மக்களுக்கே என்று சட்டம் இயற்றியுள்ளன.

ஆனால், தமிழ்நாடு மட்டும் அயல் மாநிலத்தவர்களின் வேட்டைக்காடாக மாறி வருகிறது. குறிப்பாக, அயல் மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் அதிகாரிகளாகவும், தொழில் முதலாளிகளாகவும், வணிகர்களாகவும், மருத்துவர்களாகவும், திரைத்துறையினராகவும் பரவிக் கிடக்கின்றனர்.

இப்படி, தமிழ்நாட்டில் அயல் மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் சுமார் ஒரு கோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முதலாளிகள், தொழில் முனைவோர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் எதிர்கொண்டுள்ள அபாயம் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குரல் எழுப்பி வருகிறது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பலமுறை உரையாற்றியதோடு,  தமிழ்நாட்டின் வேலை மண்ணின் மக்களுக்கே என்ற பிரமாண்ட மாநாட்டை  அண்மையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தியது. மேலும், மண்ணின் மக்களின் வேலை வாயப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன்.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்றதோடு, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தது.

இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்- 4 தேர்வு  உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இத்தேர்வை, அயல் மாநிலத்தவர்கள் தமிழ் கற்றுக்கொண்டோ அல்லது முறைகேடுகள் செய்தோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழ்நாட்டு அஞ்சல்துறைப் பணிகளுக்கான தேர்வில் தமிழில் ஒரு தேர்வு இருந்தது. அத்தேர்வில், அரியானாக்காரர்கள் 25க்கு 23 மதிப்பெண் பெற்றது அம்பலமானது.

பின்னர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டத்தை முன்னெடுத்ததை தொடர்ந்து, அத்தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.

எனவே, அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதி இங்கு வேலை பெறலாம், தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, வேலையில் சேர்ந்த பின் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என்று சட்டத்திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் பணியாளர் தேர்வைத் தமிழ்நாட்டுக் குடிமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வரையறையை உருவாக்க வேண்டும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில்  அளித்த வாக்குறுதியின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
அப்போது தான், ஒன்றிய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில், மண்ணின் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை முழுமையாக உறுதி செய்ய முடியும்.

நாகாலந்து, மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை போன்று, உள் அனுமதி அதிகாரம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என ஒன்றிய அரசிடம் கேட்டு பெற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.  இந்த நடைமுறை தான், அயல் மாநிலத்தவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அயல் மாநிலத்தவர்களின் குற்றச் செயல்களை தடுக்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.