விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு வழங்குக! வைகோ அறிக்கை
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு (ராபி 2021 – 2022) (PMFBY) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி பயிர்களுக்கு காப்பீட்டு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், மானாவாரி பயிர்களான உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு பல மாவட்டங்களில் வரும் 15.11.2021 திங்கட்கிழமையோடு காப்பீடு முடிவடைகிறது. பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரமாக பயிர் காப்பீடு இணையதளத்தின் ஆதார் இணைப்பு சேவை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நேற்று இரவு முதல் சீரடைந்து உள்ளது.
மேற்குறிப்பிட்ட நியாயமான காரணங்களை கருத்தில் கொண்டு மானாவாரி உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு காப்பீட்டு செய்யும் காலவரையறையை பத்து நாட்கள் கூடுதலாக நீட்டித்து, 25.11.2021 வரை காப்பீடு செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை