ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 20 நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக தடைப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் துவக்கும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தியது. கிட்டத்தட்ட 20 மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 15 முதல் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச விமானங்களை தொடங்க இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அறிவித்தது.
அதன்படி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற இந்தியர்களுக்கான முக்கிய நாடுகளுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலத்தை போல 00% விமானங்களை இயக்க அனுமதிக்க முடிவு செய்யபட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது வேகமாக பரவிவரும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 20 நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்குள் இந்த தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதன்கிழமை அதிகாலையில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Omicron வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான்கு பேரும் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை