ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கில் தனித்தே போட்டியிடும்; செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதி

(இனாம் எஸ்.மௌலானா)
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலாயினும் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான், கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்றூப், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான புத்திக பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில்;

இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்ய மாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்த தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கட்சி சம்மந்தப்பட்ட எந்த வேலைத் திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் சில கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து விடுகின்றனர். இதனால் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது. மாற்றுக்கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். இது விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆகையினால் எமது கட்சியின் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இக்காட்சியில் பயணிக்க முடியும்.

இந்த அரசாங்கத்தின் மீது இரண்டு வருடங்களுக்குள் மக்கள் பாரியளவில் அதிருப்தியடைந்துள்ளார்கள். விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பத்தில் இருக்கின்றார்கள். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மறுபக்கம் பால்மா, சிமெந்து, கேஸ், மண்ணேய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுபாடு நிலவுகிறது. மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள், விவசாயிகள் என்றுமில்லாதவாறு மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றார்கள்.

ஆகையினால் மக்கள் நிம்மதி, சந்தோசத்துடன் வாழ வேண்டுமாயின் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனை தொகுதியில் எமது அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸாக் ஊடாகவே சகல அபிவிருத்திகளும் நடைபெறும், அதுமட்டுமல்ல எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இங்கு தனித்து போட்டியிடும்போது கல்முனை தொகுதிக்கான வேட்பாளராக அவரே நியமிக்கப்படுவார்- என்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.