சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் விழிப்புணர்வு நடைபவனி!!

சர்வதேச மகளிர் தினத்தினமானது
உலகளாவிய ரீதியில் இன்று (08) திகதி கொண்டாடப்பட்டுவரும் நிலையில், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்,  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி அவர்களது தலைமையில் விழிப்புணர்வு நடைபவனியொன்று இன்று (08) திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
“நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய
காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியானது “பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய முன்றலை சென்றடைந்தது.
பின்னர் அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வானது சூரியா பெண்கள் அமைப்பின் வரவேற்புப் பாடலுடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவியின் “மகளீரைப்போற்றுவோம்” எனும் கவிதை  இசைக்கப்பட்டதுடன், “இயற்கை விவசாய உரப்பாவனையை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளில் விசேட உரைகளும் இடம்பெற்றது. சூரியா பெண்கள் அமைப்பின் விழிப்புணர்வு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், இதன்போது  அதிதிகளினால் பயன்தரும் பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெண்களின் சுதந்திரத்தின் வெளிப்பாடாக அதிதிகள் உள்ளிட்ட பங்குபற்றிய அனைத்து பெண்களினாலும் பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வீ.லோகினி, பிரதேச செயலக கணக்காளர் வீ.நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி தலைமையக முகாமையாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும்,
கிரான்குளம், கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் மத்தி, கிரான்குளம் தெற்கு, புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு, புதுக்குடியிருப்பு தெற்கு மற்றும் தாளங்குடா ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கான
மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.