பராசக்தி பாணியில்……

 ஒரு ஆர்ப்பாட்டக் காரன் பராசக்தி பாணியில்….
++++++
Mohamed Nizous
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.
பாதையிலே குழப்பம் விளைவித்தேன். அரசியல் வாதியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப் பட்டிருக்கின்றேன்
பாதையிலே குழப்பம் விளைவித்தேன். பாதை கூடாது என்பதற்காக அல்ல. பெற்ரோல் இல்லாத நாட்டில் கார்ப்பட் வீதி கக்கா போவதற்கா என்பதற்காக?
அரசியல்வாதியைத் தாக்கினேன். அவர் அமைச்சர் என்பதற்காக அல்ல. ஆளில்லாத ஹோட்டலில் அவர் டீ ஆத்த முற்பட்டதற்காக
உனக்கேன் இவ்வளவு அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்.  கரண்டில்லாத வீட்டில் கத்துகிற நுளம்புகளால் கடித்துக் குதறப் பட்டேன்
என்னைக் குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வீட்டுப் பாதையிலே கொஞ்ச தூரம் நடந்து பார்த்தால்  அவன் பைக்குக்குப் பெற்ரோல் இன்றி பட்ட கஷ்டம் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
பாட்டொலிக்கும் பாண் ஆட்டோ இல்லை என் பாதையில், வெறுமையான டீசல் பம்புகள்தான் நெளிந்திருக்கின்றன.
தென்றலைக் கேட்கவில்லை ரேடியோவில். காரணம் கரண்ட் இல்லை
கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே!
இலங்கையில் பிறந்தவன் நான். கேஸுக்கு ஒரு போலின் எண்ணெய்க்கு இன்னொரு போலின்
 இலங்கையர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா?
திருமணக் முடிக்க இருந்த என் தங்கையைக் காண வந்தேன். பவுண் ரெண்டு லட்சம் என்றதும் பயந்து போனேன்.
இருட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள்.
முட்டை விலை என் தங்கையை முட்டியது. மீண்டும் ஓடினாள்.
பால் விலை என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள்
Go home என்றே ஓடினாள்.
 இத்தனைக் குழப்பங்ங்களுக்கும் யார் காரணம்?
கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? ‘டொலரின்’ குற்றமா? அல்லது டொலரை உழைக்க ஊழல் செய்யும் ‘சிலரின்’ குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? ஊடகத்தின் குற்றமா ? அல்லது சில ஊடகங்கள் ஆடும் நாடகத்தின் குற்றமா?
மதத்தின் பெயரால் மடத்தனம் பேசும் போலி ஆசாமிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? மதத்தின் குற்றமா?
அல்லது மதத்தின் பெயரைச் சொல்லி  மல்டி மில்லியனாகும் கயவர்களின் குற்றமா?
 இக்குற்றங்கள் களையப்படும் வரை பஞ்சமும் கொஞ்சமும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.