விபத்து தீவிர சிகிட்சைப் பிரிவு கட்டட திறப்பு விழா.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் 25/04 திங்கட்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து சமய முறைப்படி படம் வைத்து,பால் காய்ச்சி இரண்டு மாடிகள் கொண்ட தீவிர சிகிட்சைப் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி டயாழினி மகேந்திரன்,தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினர்,வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர்,தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் தாய்ச் சங்க செயலாளர் அற்புதசீலன், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோகுமார், வைத்தியர்கள்,பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சம்பிரதாயபூர்வமாக கட்டடம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் வெகு விரைவில் சாவகச்சேரி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிட்சைப் பிரிவு இயங்க ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து தீவிர சிகிட்சைப் பிரிவு இயங்க ஆரம்பிக்கும் பட்சத்தில் பளை தொடக்கம் நாவற்குழி வரையான மக்கள் மற்றும் பூநகரி பிரதேச மக்கள் என சுமார் 80,000 மக்கள் இதனூடாக பயனடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்க ஒதுக்கீட்டிற்கு மேலாக தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் ஊடான புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் குறித்த தீவிர சிகிட்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை