தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்
(கிண்ணியா நிருபர் )
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில் சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணிக்கு பாடசாலைக்கு முன்னால் இடம் பெற்றது.
ஏற்கனவே இப்பாடசலையில் பதில் கடமை அதிபராக ஈடுபட்டு வந்த அதிபர்,புதிய அதிபரை கடமை ஏற்க இடையூறு ஏற்படுத்தி வருகிறார்; எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் நலன் விரும்பிகள் எனப் பலர் ஈடுபட்டனர்.
இதனால் பாடசாலைக்குள் மாணவர்கள் செல்லாமல் வீதி ஓரங்களில் தமது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். இவர்களோடு ஏனையவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிண்ணியா கொழும்பு மற்றும் கண்டி, கந்தளாய் முதலான இடங்களுக்குச் செல்லும் போக்குவரத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனை அடுத்து கிண்ணியா வலயக் கல்வி அதிகாரிகளின் தலையீட்டினை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது