வவுனியா – பூவரசன்குளம் பொலிஸாரால் இருவர் கைது
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல பொருள்கள் மீட்கப்பட்டன எனவும், 30 இற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் என பல வகையான பொருள்களை திருடிய சம்பவங்களுடன் இருவரும் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெருந்தொகை பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பூவரசன்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.