போதைப்பொருள் பாவனை குற்றச் செயல்களை தடுக்கின்றமை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
பாறுக் ஷிஹான்
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சமூக மட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வானது கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியும் விசேட அதிதியாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்(ஏ.எஸ்.பி) கே.எம்.லசந்த புத்திகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது நிகழ்வு பொது மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமாகியதுடன் வரவேற்புரையை கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ. எல் ஏ. வாஹிட் மேற்கொண்டு நிகழ்வை நெறிப்படுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதான வளவாளராக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம். எம். ஜி. பி. எம். றஸாட் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக்கலந்துரையாடலில் பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடு, குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பல தரப்பினரிடம் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதி முறை தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
அத்துடன் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும்.இவ்விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின் இந்த போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றமானது ஏற்படப் போவதில்லை. இதைவிட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை தமது பிள்ளைகள் போன்று கண்காணிக்க வேண்டும்.இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருக்கின்றோம் என அதிதிகளாக கலந்து கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.