கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு
நூருல் ஹூதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் கல்வியாண்டுக்காக தரம் ஆறாம் பிரிவில் புதிதாக இணைந்து கொண்ட மாணவிகளை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு தரம் ஆறு, ஏழு பகுதித்தலைவிகளின் வழிகாட்டலில் இன்று (திங்கட்கழமை) கல்லூரியின் முதல்வர் ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் கலந்து கொண்டார்.
தரம் ஆறில் இணைந்து கொண்ட புதிய மாணவிகளை தரம் ஏழு கல்வி கற்கும் மாணவிகளால் பாடசாலை முன்றிலில் பூ தூவி மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு பதாகைகள் ஏந்திய வண்ணம் வரவேற்கப்பட்டதுடன் நாட்டின் தேசிய, பாடசாலை கீதம் மற்றும் கல்லூரியின் ஒழுக்க விழுமியங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் மற்றும் இனிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விஷேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட தரம் ஆறு, ஏழு மாணவிகளுக்கான காலை ஆராதனை நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர் ஆகியோரால் நற்சிந்தனைகள் மற்றும் கல்வி தொடர்பான ஊக்கப்படுத்தும் உரைகள் இடம்பெற்றன. ஸ்மார்ட் கிளாஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் புதிய மாணவிகளிடம் கலந்துரையாடி கல்லூரி தொடர்பான முதல் நாள் அனுபவத்தின் பின்னூட்டத்தை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதிஅதிபர்களான எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஏ.எச்.நதீரா, உதவி அதிபர் என்.டி.நதீகா உட்பட பகுதித்
தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.