விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்களாக தோண்டியும் ஏமாற்றம்
முல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது நாளாக இன்றும் (20) தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.
அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.
இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.