மலையகம் பற்றிய கலை, இலக்கிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை!
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றை உள்ளடக்கிய ஒரு நாள் நிகழ்வு ஒன்றை கிறேஷியன் ட்ரஸ்ட் அமைப்பினர் எதிர்வரும் 25 பெப்ரவரி 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்திலே ஏற்பாடு செய்துள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள் என்பவற்றைப் பற்றிப் பேசும் இலக்கியங்கள் மற்றும் ஏனைய கலை வடிவங்கள் மீது கவனத்தைக் குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சியிலே மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான எஸ்தர், சந்திரலேகா கிங்ஸ்லி, சிவனு மனோகரன் தமது எழுத்துக்களில் இருந்து சில பதிவுகளை வாசிப்பர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் விசேட கலைமாணிப் படிப்பில் ஈடுபடும் மாணவி இராமச்சந்திரன் கிர்ஷிகா மறைந்த எழுத்தாளர் சி. வி. வேலுப்பிள்ளையால் எழுதப்பட்ட ”சிலோனின் தேயிலை தோட்டத்தில்” என்ற நெடுங்கவிதையில் இருந்து ஒரு பகுதியினை வாசிப்பார். இந்த அமர்வினை யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதும் எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தன் நெறிப்படுத்துவார்.
அதனை அடுத்து மலையக மக்களின் அனுபவங்களைப் பேசும் ஒரு நடன ஆற்றுகையினை பரதநாட்டியக் கலைஞரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனாசிரியருமான இராசையா தனராஜ் வழங்குவார். இந்த ஆற்றுகைக்கு அணிசெய் கலைஞர்களாக ஆனந்தகிருஸ்ணன் ஸ்ரீகாந்த் (நட்டுவாங்கம்), முரளிதரன் சுலக்ஸன் (கஞ்சிரா) ஆகியோர் பங்களிப்பர்.
அதன் பின்னர் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலே எழுதப்பட்ட இலக்கியங்களிலே மலையகத் தமிழ் சமூகம் எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது என்பது பற்றிய வட்டமேசை உரையாடல் ஒன்று இடம்பெறும். இந்த உரையாடலிலே பெ. சரவணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), சு. முரளிதரன் (மேலதிக ஆணையாளர் நாயகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்), லறீனா அப்துல் ஹக் (சிரேஷ்ட விரிவுரையாளர், மொழிகள் துறை, சபரகமுவ பல்கலைக்கழகம்) சிவமோகன் சுமதி (பேராசிரியர், ஆங்கிலத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் பங்கேற்பர். இந்த அமர்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத்துறையிலே சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் சாமிநாதன் விமல் நெறிப்படுத்துவார்.
பி.ப 3 மணிக்கு சிவமோகன் சுமதியின் மலையகம் பற்றிய இங்கிருந்து திரைப்படக் காட்சியும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
இலக்கியம், திரைப்படம், நடனம் போன்ற துறைகளிலே ஆர்வம் கொண்டோர், பொதுமக்கள் அனைவரினையும் இந்நிகழ்விலே கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு ஜோன் கீல்ஸ் ஃபவுன்டேஷன்ஸ் அனுசரணையாளர்களாகச் செயற்படுகின்றனர்.