யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புடன்; ஜம்இய்யதுல் உலமா சபை விசேட சந்திப்பு!

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் கல்முனை அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்  ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை ஜனாஸா நலன்புரி அமைப்பின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின் இவ் உயரிய சேவைக்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் நோக்கில்  இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாஸா நலன்புரி சேவை வாகன கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி கல்முனை அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்  ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜெலீல், செயலாளர் மௌலவி ஏ.எல்.எம்.நாஸர்  உள்ளிட்ட உயர்பீடத்தினரால் ஜனாஸா நலன்புரி அமைப்பினரிடம்  கையளிக்கப்பட்டது.

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின்  தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில், செயலாளர் எம்.வை.பாயிஸ், பொருளாளர் எம்.எச்.எம்.நியாஸ், உப பொருளாளர் எம்.இக்றாம்,
உப தலைவர்களான எஸ்.அஷ்ரப்கான், முஹம்மட் ஹில்மி, முகாமையாளர் ஏ.வி.எம்.அர்ஷாத், கணக்குப் பரிசோதகர் ஏ.சி.எம்.பௌஸர் ஆகியோருடன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு  தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜெலீல் உரையாற்றும்போது –

இஹ்லாசான எண்ணத்துடன் எமது இந்த சேவையை செய்து வருகின்றபோது சகல தேவைகளையும் இறைவன் பூரணமாக்கி தருவான். சமூகத்திலுள்ள  சகல தரப்பினரும் இந்த உயரிய பணிக்காக உதவ முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இணைந்து எமது ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தானாக முன்வந்து உதவுவதற்குத் தயாராக வேண்டும். இது அழ்ழாஹ்வால் மிகவும் விரும்பத்தக்க பணியாகும். இதற்காக கால நேரங்களை ஒதுக்கி  செயற்படுகின்ற அனைத்து நபர்களுக்கும் இறைவனின் நற்கூலி நிச்சயமாகக்; கிடைக்கும். இதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஊரிலுள்ள சகல தரப்பினரும் கொள்கை பேதங்களை மறந்து உதவுவதற்கு முன் வரவேண்டும். – என்றார்.

இந்த ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு இருக்கின்ற தேவைகளை நிவர்த்தி செய்ய  எங்களுடைய உலமா சபை முழு பங்களிப்பையும் ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவதற்கு என்றும் தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.