உலக சாதனை வீரனுக்கு ஊர் ஒன்றுகூடி கௌரவிப்பு!
அபு அலா –
சர்வதேசம் சென்று ‘சோழன் உலக சாதனை’ நிகழ்வில் புலன் உறுப்புகள் மற்றும் உடல் பாகங்களால் சாகசம் செய்து சாதனை நிகழ்த்திய சாய்ந்தமருது பர்ஷானுக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி கௌரவித்த வரலாற்று விழா கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அண்மையில் இந்தியா – தஞ்சாவூரில் ‘சோழன் உலக சாதனை’ நிகழ்வு இடம்பெற்றது. இதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பர்ஷான் கலந்து கொண்டு, பற்களால் தேங்காயை உறித்தும், மரப் பலகையை கைகளால் உடைத்தும், கண் இமையால் ஐந்து கிலோ எடையைத் தூக்கியும், குளிர்பானத்தை மூக்கால் அருந்தியும் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் செய்த சாதனையைக் கௌரவிக்கும் முகமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். ஹிபத்துல் கரீம் வழிகாட்டலில் யூத் அலைன்ஸ் ஸ்ரீ லங்கா இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்தக் கௌரவிப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேர்தல் சீர்திருத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையார் ஏ.எல்.எம் சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.எம்.மன்சூர், பொருளாளர் உஷாம் எம்.சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாறக், ஈஎவ்கியு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.நஸீர் உள்ளிட்ட ஊரின் பல பிரமுகர்கள் ஒன்றுகூடி சாதனையாளர் பர்ஷானுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போத்திக் கௌரவித்தனர்.
இதில் பர்ஷானுக்கு நல்லாசி வேண்டி பேஷ் இமாம் அல்-ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவாவால் விசேட துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.