பொலிவேரியன் கிராமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்!
நூருல் ஹூதா உமர்
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்களை மீளக் குடியமர்த்த பிரதேச அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருள்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளன.
தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மினின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
தீயால் வீட்டின் பொருள்கள் முற்றாக சேதமாகியதுடன் வீட்டின் கூரையும் அழிவடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவிலை. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க விரைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளைப் பணித்திருந்தார்.