சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பிரதேசத்தில் திண்ம கழிவு சேர்வதைத் தடுக்கும் செயற்பாடு!

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தின் முன்றிலில் ‘பிறேவ் லீடர்ஸ் ரெஸ்ட் பார்க்’ உருவாக்கும் சிரமதானப் பணி அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸின் அனுசரணையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

சாய்ந்தமருதின் தாய்க் கழமான பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழத்தால் அதன் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற முன்னாள் மக்கள் வங்கியின் முகாமையாளருமான எம், எஸ்.எம்.மசூத் மற்றும் கழகத்தின் சிரேஷ்ட விளையாட்டு வீரரும் ஆலோசகருமான எம்.வை.ஹாறூன் ஆகியோரின் வழிகாட்டலில் கழகத்தின் புதிய தலைமையும் விளையாட்டு உத்தியோகத்தருமான ஏ.எம்.எம்.றிபாஸின் தலைமையில் இச்சிரமதானப் பணி இடம் பெற்றது.

மைதானத்தின் முன்றிலில் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசியதுடன் வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் அசௌகரியங்களையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்தது.

இதனைக் கவனத்தில் கொண்ட பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம்.றிபாஸ் திட்டத்தை கழகத்தின் ஒத்துழைப்புடன் செயலில் காட்டியிருந்தார்.

விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு துறையில் மட்டுமல்ல பொதுவிடயங்களிலும் செயற்பட முடியும் என்பதை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.