உள்ளூர் பிரமுகர்களுடன், உல்லாச பயணிகளையும் கவர்ந்த யாழ். உடல், உள ஆரோக்கிய சதுக்கம்!
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் சிகரம் நிறுவனத்தின் படலை:வடக்கு மாகாண சுற்றுலா சேவை பிரிவு நடத்திய உடல்-உள ஆரோக்கியத்துக்கான பௌர்ணமி கூடல் நிகழ்வு, உள்ளூர் பிரமுகர்கள் முதல் உல்லாசப் பயணிகள் வரையில் ஏராளமானவர்களை ஈர்ப்பதாக நடைபெற்றிருந்தது.
பெப்ரவரி 23 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் மாலை 4.30 மணிக்கு பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வில் யோகாசன செயல்முறை விளக்கமும், சும்பா உடற்பயிற்சி விளக்கமும் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மருத்துவர்களான திருநாவுக்கரசு ராகுலன், தர்சினி சிவகுமார் ஆகியோர் உடல்-உள ஆரோக்கியத்துக்கான யோகாசன செயன்முறை விளக்கத்தை தமது மாணவர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.
யாழ் பல்கலைக்கழக சமூகவியல்துறை இறுதியாண்டு மாணவியான பிரியதர்ஷினி தர்மகுலசிங்கம் மற்றும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி க.பொ.த. சாதாரணதர மாணவியான தீரணா றுஷாங்கன் ஆகியோர் மருத்துவர்களுடன் இணைந்து மேடையில் ஆசனங்களைச் செய்து காட்டினார்கள்.
தொடர்ந்து சும்பா உடற்பயிற்சி நிபுணர் செரி வாணி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரண்டு சிறுமிகளை இணைத்து இசையுடன் கூடிய சும்பா உடற்பயிற்சி செயல்முறை விளக்கத்தை வழங்கினார். சும்பா செயன்முறை விளக்கத்தை யாழ் கோட்டை மதில் சுவரிலிருந்து கண்ணுற்ற சுற்றுலா பயணிகள் இரசித்து, தாமும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
யோகாசனத்துடன் இணைந்து உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பாரம்பரிய ஆரோக்கிய உணவுகளையும் அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டத்தின்படி, நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு இலைக்கஞ்சி மற்றும் குரக்கன் கூழ் என்பன வழங்கப்பட்டன. அல்லை விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த கிரிசான் இவற்றைத் தயாரித்துக் கொண்டுவந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில், யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.அறிவழகன், ஐக்கிய நாடுகள் அலுவலக யாழ் உயரதிகாரி காயத்திரி, நொதேர்ண் வைத்தியசாலை உரிமையாளர் மருத்துவர் கேசவன், கொமர்ஷல் வங்கி யாழ் பிராந்திய முகாமையாளர் ஜெயபாலன், யாழ் வைத்தியசாலை வீதி கிளை முகாமையார் ராஜமனோகரன், சம்பத் வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் குமணன், ஜெற்விங் உல்லாச விடுதியின் பொது முகாமையாளர் நிலந்தி மற்றும் ஆளணி முகாமையார் சுவேதிகா, யாழ் ரி.சி.ரி. பல்பொருள் வாணிப நிறுவனத்தின் பொது முகாமையாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல்துறைசார் பிரமுகர்களுடன், பொதுமக்கள், ஆர்வலர்கள், எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
பௌர்ணமி தின விடுமுறைக்காக தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த பல உல்லாசப் பயணிகளும் இந்த நிகழ்வை வீதியோரங்களில் இருந்தும், கோட்டை மதில் சுவரிலிருந்தும் கண்டு களித்தமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.