நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஜே.வி.பி, ஐ.ம.சவுக்கு கிடையாது என்கிறார் நிமல் லான்சா
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் ‘புதிய கூட்டணி’ முன்னோக்கி செல்வதாக, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் லான்சா இக்கருத்தை வெளியிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிமல் லான்சா –
புதிய கூட்டணியின் பலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இங்கு வந்துள்ள மக்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எமது வேலைத்திட்டத்திற்கு சக்தியாக இருப்பவர்களே இங்கு வந்துள்ளார்கள். இந்த புதிய கூட்டணி, வாக்குறுதிகளை அளிக்கும் ஒன்று அல்ல, இது ஒரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்லும் பயணமாகும். வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்ததாலேயே 70 வருடங்களாக இந்த நாடு அழிந்தது. வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கடன் வாங்க வேண்டியிருந்தது. இல்லையெனில், பணத்தை அச்சடிக்க வேண்டியிருந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்ற பணமில்லை.கடன் வாங்கி பணத்தை அச்சிட்டதால் நாடு அழிந்தது.
எனவே இந்த புதிய கூட்டணியின் முக்கிய நோக்கம் மக்களுக்கு உண்மையைக் கூறுவதாகும். சத்தியத்தைப் பேசுவது, மக்களுக்கு யதாத்தத்தைப் புரிய வைப்பதாகும். அவ்வாறு அல்லாமல் பொய் கூறுவதல்ல. திருடர்கள் பிடிபட்டால் பொருளாதாரம் உயரும் என ஜே.வி.பி மேடைக்கு மேடை ஏறி கூறி வருகிறது. திருடர்களை பிடிக்க 2015 இல் எவ்.சி.ஐ.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு திருடனும் பிடிபடவில்லை.மீண்டும் அநுரகுமார வேலைத்திட்டம் எதனையும் முன்வைக்கமாட்டார்.
மறுபுறம், ஐ.ம.ச. தலைவர் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வாக்குறுதிகளை வழங்க உங்களிடம் பணம் இருக்கிறதா? பணம் இல்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைப்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் பணம் தேட முடியாது. மரங்களிலிருந்து பணத்தைப் பறிக்க முடியாது. மந்திரத்தால் கூட பெற முடியாது. பொருளாதாரத் திட்டம் கட்டாயமாக வகுக்கப்பட வேண்டும். ஜே.வி.பி.யின் மேடைகளில் ஒரு கலைஞரை அழைத்து வந்து பாடலைப் பாட வைத்தவுடன், ஒரு நடிகையை வரவழைத்து புராணக் கதை சொல்ல வைத்தால், அது ஒரு பெரிய வேலை என்று நினைக்கிறார்கள். அண்மையில் ஒரு மேடையில், 100 பெண்கள். 200 மார்பகங்கள் என சொல்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் இவர்கள்? அசிங்கமாக பேசுகிறார்கள். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். கொழும்பில் இருந்து காலி வரை மார்பகங்களைக் காட்டிக் கொண்டு நடக்க வேண்டும் என்கிறார்கள். இவை வேலைத்திட்டங்கள் அல்ல. நாட்டைக் கட்டியெழுப்ப வேலைத்திட்டத்தை முன்வைப்பது அவசியம்.
நாங்கள் வரும்போது கொடுப்போம் என ஐ.ம.சவினர் சொல்கிறார்கள். இருந்தால் கொடுங்கள். கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டும். தகுதியற்றவர்களுக்கு வழங்கிப் பயனில்லை. அதை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி நடந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். வீழ்ந்த குழிக்குள்ளேயே மீண்டும் நாட்டை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. உண்மையையும் யதார்த்தத்தையும் சொல்லி மக்களை எம் பக்கம் இழுக்க வேண்டும். அவ்வாறின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
இனிவரும் காலத்தில் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே, எமது கூட்டணியின் பிரதான சவாலாகும். மார்ச் மாதத்தில், இந்த நாட்டில் மிகப்பெரிய கூட்டணி உருவாகவுள்ளது. அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு மக்களும் இந்தக் கூட்டணியை நோக்கி ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எம்முடன் இணையவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐ.ம.ச. கட்சி ஆதரவாளர்களை எம்மைச் நோக்கி அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஒரு வேலைத்திட்டம் நாட்டுக்கு முன்வைக்கவுள்ளோம், பொய்யான அரசியல் வாக்குறுதிகள் அல்ல.
நாம் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி மே மாதத்தில் லட்சக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். முடிந்தால் மக்களை ஒன்று திரட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஐ.ம.சவுக்கும் சவால் விடுக்கின்றோம். நாம் தற்போது ஆரம்பித்தது மாத்திரமே. முதலாவது ஜா-எலவில் வைத்தோம். இரண்டாவது ஹைட் பார்க்கில், மூன்றாவது அம்பாந்தோட்டையில், நான்காவது பதுளையில். ஐந்தாவது மொணராகலையில் வைக்கவுள்ளோம்.
மே மாதம் முதல் 160 தொகுதிகளிலும் மக்களை ஒன்றிணைத்து, கூட்டம் கூட்டமாக எமது கூட்டணியை நோக்கி பாரிய மக்கள் கூட்டத்தை ஒன்றிணைப்போம். பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வருமானம் ஈட்டுவது எப்படி என்று சொல்ல வேண்டும். செலவைக் குறைக்கும் முறையைக் குறிப்பிட வேண்டும்.
மக்கள் அனைத்துப் பல்கலை மாணவர்களின் கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள். பல்கலை மாணவர்கள் ஆட்சியமைக்க செல்லவுமில்லை. ஆட்சியமைக்கப் போவதுமில்லை. வாய்வீச்சாளர்களும் இவர்களைப் போன்றவர்களே. குரைக்கும் நாய்களை அடக்கிய இந்தியாவுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். 40 ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க முயன்ற போது, அதையெல்லாம் சீர்குலைத்தது யார்? மக்கள் விடுதலை முன்னணி. அந்த மக்கள் விடுதலை முன்னணி, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வந்து இந்தியா மாறிவிட்டது, நாமும் மாற வேண்டும் என்று சொல்கிறது. அன்று தலைவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ள, இவர்களுக்கு 40-50 ஆண்டுகள் சென்றுள்ளன. தற்போது எமது தலைவர்கள் சொல்வதை இவர்கள் ஏற்றுக் கொள்ள இன்னும் 50 ஆண்டுகள் செல்லும்.
அநுரகுமாரவுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகின்றது. இந்தியா சென்று 5 நாள்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அநுரகுமாரவிற்கு யெஸ், நோ என்றுதான் சொல்ல முடியும் என, ஜா எல சந்திப்பில் நான் கூறினேன். இந்தியா சென்ற பிறகு, நோ என்று கூறத் தெரியவில்லை என்று தெரிந்து கொண்டேன். இந்திய விஜயத்தின் போது அவர் எந்தவொரு உரையும் மேற்கொள்ளவில்லை. விஜயத்தின் 5 நாள்களும் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. இந்தியா ரெகோர்டிங்கை நிறுத்தி வைத்துள்ளது. ஏனென்றால் பேசுவதற்கு மொழி தெரியாது. பேசியவற்றை இங்கே போட்டிருந்தால் இருக்கும் கொஞ்ச வாக்குகளும் இல்லாமல் போய் விடும். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென் நாம் அன்றிலிருந்து கூறி வருகிறோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று இவர்கள்தான் கூறினர். சம்பூரை எதிர்த்தார்கள். எட்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவில் இருந்து மக்கள் பொருள்களைக் கொண்டு வந்தால் கொலை செய்தனர். தீ வைத்தார்கள். அவ்வாறான ஒரு கடந்த காலம் ஒன்றும் உள்ளது.
இப்போது வந்து, டெண்டர் போட்டால் பரவாயில்லை என்கிறார்கள். அரைக்கு அரைவாசி கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்திய பரவலாக்கத்தின் எதிர்ப்பு காரணமாக இறந்தவர்கள் எத்தனை பேர்? ஆனால் இப்போது 50 வருடங்கள் கழித்து 50:50 தான் சிறந்தது என்று புரிந்து கொண்டுள்ளனர். உலகின் தலைசிறந்த தொழிலதிபர்களை கொண்டு வர ஏனைய நாடுகளுடன் நாம் போட்டியிட வேண்டும் என்பதை இன்னும் 50 வருடங்களில் தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறின்றி அவர்கள் இலங்கைக்கு வரமாட்டார்கள். அவர்கள் தெரிவு செய்ய மேலும் நாடுகள் உள்ளன. இது இவர்களுக்கு புரியாது. இவற்றைப் புரிந்து கொள்ள இவர்களுக்கு இன்னும் 50 ஆண்டுகள் செல்லும்.
ஜேவிபிக்கு வேலைத்திட்டம் கிடையாது. வாய்வீச்சாளர்களுக்கும் வேலைத்திட்டம் கிடையாது. பொய்யர்களுக்கும் திட்டம் எதுவுமில்லை. ஜோக் காரர்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். தவறான கூட்டங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஒரு திட்டத்துடனேயே இந்தக் கூட்டணி முன்னோக்கி செல்கிறது என்ற செய்தியை நாம் நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். நாம்பொய் சொல்லவில்லை. மக்களுக்கு உண்மையைச் சொல்கின்றோம். மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைக்கிறோம். நாம் சொல்வதைக் கேட்காமல் மக்கள் வேறு குழுவினர்களைக் கொண்டு வந்தால் மூன்று அல்லது ஆறு மாதங்கள்தான் அவர்கள் இருப்பார்கள். மக்கள் கல்லெறிந்து விரட்டியடிப்பார்கள் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னுதாரணத்தையும் நாம் கண்டுள்ளோம்.
அநுரகுமாரவால் ஆட்சிக்கு வர முடியாது. அதனாலேயே ஒரு திட்டத்தைக் கூறுகிறார் இல்லை. ஆட்சிக்கு வருவது என்றால் வேலைத்திட்டம் ஒன்றைச் சொல்வார்கள் தானே. ஆனால் அவர்கள் தினமும் போராட்டம் நடத்தவே விரும்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டும். அதுதான் ஒரு திட்டத்தை சொல்கிறார்கள் இல்லை. சஜித்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும். நாமல் ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை விரும்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அநுரகுமார, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகிய மூவரும் மோதிக் கொள்கின்றனர். இவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால், ஜனாதிபதி பதவியை எடுக்க விரும்பினால், அவர்கள் வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். – என நிமல் லான்சா இங்கு மேலும் தெரிவித்தார்.