பொதுத் தேர்தலே மொட்டுவின் தெரிவு வியூகத்துடன் மார்ச் வருகிறார் பஷில்! உதயங்க வீரதுங்க கூறுகிறார்
பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
பொதுஜனபெரமுனவை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பஷில் ராஜபக்ஷவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது.
அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்ஷவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.
கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்ஷவின் பிரதான பணியாக இருந்தது.
இவ்வாறான நிலையில், பஷில் ராஜபக்ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.
பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.
பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும். இருப்பினும், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பஷில் ராஜபக்ஷவே முன்னெடுப்பார்.
மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.
ஏவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ மீண்டும் பொதுஜனபெரமுனவினைப் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். – என்றார்.