தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் தென்மராட்சியில் பேரெழுச்சி கண்டது!
தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
தாய்மொழித் தின ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர்களான சி.விமலேஸ்வரி, கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மற்றும் கருணாகரன் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கு பற்றி இருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து மாவீரர் ஒருவரின் தாயாரால் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.
கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ. சரவணபவன் , ஞா.ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் , சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் , உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தவத்திரு அகத்தியர் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , ஈ சரவணபவன், ஞா. சிறீநேசன் , சி. யோகேஸ்வரன் , பா. அரியநேந்திரன் , கவீந்திரன் கோடீஸ்வரன் , சமூக செயற்பாட்டாளர் திருமதி சசிகலா ரவிராஜ் , முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா. உதயகுமார் , பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பார்த்தீபன் , சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் , ஊடகவியலாளர் முஸ்டீன் , போராளிகள் நலன்புரிச்சங்க தலைவர் ஈஸ்வரன் , சட்டத்தரணி உமாகரன் , கரைச்சி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வேளமாலிகிதன் , சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
மாநாட்டின் நிறைவில் 10 அம்சங்களை கொண்ட ஒரு பிரகடனமும் முன்மொழியப்பட்டது.
பிரகடனத்தில் முன்மொழியப்பட்ட அம்சங்களாவன:
1. தமிழ்த் தேசியம் மட்டுமே தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றும் அதுவே எம் இருப்பின் தாரக மந்திரமும் ஆகும் .
2. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில் அதன் எதிர்பார்க்கைகளோடும் முன் வைப்பதனை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
3. மக்களுக்கான புதிய அரசியல் உந்து சக்தியாக இளைய தலைமுறையை முன்னிறுத்தி அரசியல் களப்பணியை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிப்பதை இம்மாநாடு முன்மொழிகிறது.
4. ஆயுதப்போர் மௌனிக்கச் செய்யப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதையும் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய நடைமுறைப்படுத்தப்படும் பிரித்தாளும் தந்திரோபாய வழிமுறைகள், பற்றிய விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு முன் நகர்த்தப்படுவதை இம்மாநாடு முன்மொழிகிறது.
5. ஆயுதப்போர் மௌனித்துப் போனாலும் ஒன்றரை தசாப்தம் கடந்தும் யுத்தத்தால் பாதிப்புற்று இன்றுவரை மீள முடியாத வாழ்வியல் அவலத்தில் உழலும் மக்களின் மீட்சியை உறுதிப்படுத்தவும் அவர்கள் தமது சொந்தக் காலில் நிலைபெறவும் நடைமுறைச் சாத்தியமான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல் படுத்தப்படுவதை தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு முன்மொழிகின்றது .
6. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத தாயக பூமியாகும். இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் அனைத்துத் தளங்களிலும் உறுதிப்படுத்தப்படுவதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
7. தமிழ்த் தேசிய எழுச்சியின் குரல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் சமூகங்களின் உரிமை, இருப்பு, அரசியல், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, விழுமியம், சமயம், கலை, கலாச்சாரம், இலக்கியம், ஊடகம், தொழில்வாய்ப்பு, நிலம், நிருவாகம் சார்ந்த அனைத்திலும் தனித்துவமாக உறுதிப்படுத்தப்படுவதை ஆதரித்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
8. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாசைகள் அரசியல் வியாபாரிகளின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு இளைய தலைமுறையின் பங்கு பற்றுதலோடு மக்களின் குரலாக தேசிய அளவில் மாற்றப்படுவதையும் போலி தமிழ் தேசியவாதிகளின் பிடியிலிருந்து தமிழ் தேசிய அரசியலை மீட்டு அதன் தூய வடிவில் இளம் தலைமுறையிடம் கையளிப்பதையும் இம்மாநாடு ஆதரிக்கின்றது
09. துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்ட பேரவை ஸ்தாபிக்கப்பட்டு அறிவார்ந்த வழிகாட்டுதல்களை துறை சார்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு தமிழ் தேசியத்தின் கனவுகளையும் லட்சியங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான சாதகமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை இம்மாநாடு முன்மொழிகிறது
10. தமிழ் தேசத்தின் தவிர்க்க முடியாத ஜீவ நாடியாகத் திகழும் பெண்களின் பங்கு பற்றுதலை அனைத்துத் துறைகளிலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இம் மாநாடு ஆழமாக முன் வைக்கிறது
தமிழ் தேசியத்தை மீள வலியுறுத்தும் ஒரு வெற்றிகரமான மாநாடாக இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.