தேசிய கட்டுமான சங்க விருது வழங்கும் நிகழ்வு!
பாறுக் ஷிஹான்
இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27 ஆவது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டட மற்றும் நிர்மாணத்துறையில் நேர்த்தியாகவும், சிறந்த முறையிலும் பணிகளை முன்னெடுத்த 8 நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டரிட்டன் போல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள் விசேட அதிதிகளாகவும், பொறியியலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய கட்டுமான சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சங்கத்தின் பிராந்திய தவிசாளர்கள் என பலர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது 2022ஃ2023 ஆகிய காலப்பகுதிகளில் சிறந்த முறையில் கட்டுமான பணிகளை முன்னெடுத்த நிறுவனங்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த காலங்களில் சிறந்த முறையிலும் நேர்த்தியாகவும் கட்டுமான பணிகளை முன்னெடுத்த பொத்துவில் ஹிமா ஆலோசகர்கள் மற்றும் கட்டுமானம் நிறுவனத்துக்கு சிறப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் பணிப்பாளரும், தொழிலதிபருமான ஐ.எல்.ஹில்முடீன் குறித்த விருதை அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.