இன மத பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குக! மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கோரிக்கை
கே எ ஹமீட்
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து எல்லா இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும்.
ஒரு புறம் தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் அதேவேளை மறுபுறத்தில் தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக பிரித்தெடுத்து சிறுபான்மை கட்சிகளை பல வீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என சம்மாந்துறை மலையடி கிராமம் – 01 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளை புனரமைப்புக் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் –
சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது கட்சிகளின் தலைமைகளிடமும், கட்சிகளிடமும் உத்தியோக பூர்வமான பேச்சுகளில் ஈடுபட வேண்டும்.
மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப், ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் மத்தியில் வந்து சமூக ஒற்றுமைக்காகவும், எமது அரசியல் உரிமைக்காகவும் கட்சி சொல்லும் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.தலைவரின் கோரிக்கையை ஏற்று நாம் தேர்தல்களில் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தோம்.
தலைவருக்கும், கட்சிக்கும் விசுவாசமாக நாம் செயற்பட்டதால் நமது சமூக அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு பலமாக அமைந்தன.
கட்சிக் கட்டுக் கோப்பையும், கட்சியையும் மீறிய கடந்த கால செயற்பாடுகளுக்கு கட்சி புனரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்ட பின் முற்றுப்புள்ளி வைக்கப்படும். கட்சியையும்,கட்சி கட்டமைப்பையும் சீர்குழைத்து விட்டு பதவிகள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக கட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கட்சிக்கும், தலைமைக்கும் , வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமில்லாத செயற்பாடுகளால் நமது மக்கள் நமது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகி வருகின்றன என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியையும், தலைமையையும், மக்களையும் நேசிக்க வேண்டும் கட்சியின் ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டு தேர்தல் நடைபெறும் காலங்களில் யார், யார் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்குமோ அவர்கள் நாடாளுமன்றம், மாகாணசபை,உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களாக போகட்டும். ஆனால் இனிமேல் கட்சியையும் மக்களையும் பாவித்து பதவிகளையும் பெற்று விட்டு கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு கட்சி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கட்சியின் தீர்மானத்திற்கும் கட்சி தலைவரின் தீர்மானத்திற்கும் விசுவாசமாக செயற்பட வேண்டும். கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்ற பின் சம்மாந்துறை சமூகத்திடம் பேச்சில் ஈடுபட்டு நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
சம்மாந்துறை சமூகத்தின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றுவதுடன், நமது கட்சிக்கும் சம்மாந்துறை மக்களின் பலம் பெறுமதியாக அமையும். எனவே, நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு நமது கட்சியை கிராம மட்டத்தில் பலப்படுத்தும் செயற்பாடுகளில் அர்பனிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன்,அரசியல் அதிஉயர்பீட உறுப்பினரும்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.சௌபீர்,மத்திய குழுவின் செயலாளர் ஏ.ஜே.எம்.அஸாறுபீன்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம்,சம்மாந்துறை பிரதேச சபை சுயேற்சை குழு வேட்பாளர் எஸ்.றியால்,சம்மாந்துறை தைக்கா பள்ளி வட்டார வேட்பாளர் அர்ஸாத் இஸ்மாயில்,முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.நசீர் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.